
சென்னை திருவான்மியூர் முதல் கன்னியாகுமரி வரை கடற்கரையை ஒட்டி கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இதில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதி தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் விபத்து நடப்பது தொடர்கதையாக உள்ளது.
சென்னையில் வசிக்கும் மக்கள் வார இறுதி நாட்களில் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளுக்கு வந்து பொழுதை கழித்து விட்டு செல்வர். இந்த சாலையில், வாகனங்களை அதிவேகமாக இயக்குவதால் விபத்து நடப்பதாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் கிரேன் மோதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரைச் சாலையில் நள்ளிரவில் கேஸ் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஒன்று, கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அதிகாலையில் அந்த வழியாகச் சென்ற கிரேன் ஒன்று சாலை தடுப்பில் மோதி அருகில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதனால், இருசக்கர வாகனத்தில் வந்த பனையூரைச் சேர்ந்த ரசீத் அகமது (23) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த காட்சிகளைப் பார்த்தபடி கிரேனை இயக்கியதால் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தொடர்ச்சியாக அப்பகுதியில் விபத்து ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியின்போது, கிரேன் உடைந்து விழுந்து நேற்று 17 பேர் உயிரிழந்தனர். அதில், இரண்டு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.