#BREAKING வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

By vinoth kumarFirst Published Mar 9, 2021, 1:05 PM IST
Highlights

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறிவிட்டது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறிவிட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், தற்காலிக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து, தென்நாடு மக்கள் கட்சி நிறுவனர் கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர், வன்னிய கவுண்டர், வன்னிய குல ஷத்திரியர் என ஏழு பிரிவினருக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். சாதிவாரி மக்கள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கி உள்ளதால், ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அந்தச் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இயற்றப்பட்டது எனவும் மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர்மரபினர் பிரிவினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எண்ணம் இருந்திருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்றும், தேர்தல் நெருங்கும் நிலையில் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்தச் சட்ட மசோதா இயற்றப்பட்டு உள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது. ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனையடுத்து, மனுவுக்கு 8 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

click me!