விம்பிள்டன் டென்னிஸ்: வீனஸ், முகுருஸா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்…

Asianet News Tamil  
Published : Jul 14, 2017, 10:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
விம்பிள்டன் டென்னிஸ்: வீனஸ், முகுருஸா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்…

சுருக்கம்

Wimbledon tennis Venus and Muguruga progress to the final round

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா இறுதிச் சுற்றுக்கும், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - கனடாவின் கேப்ரில்லா டப்ரோவ்ஸ்கி இணை காலிறுதிக்கும் முன்னேறினர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸும், பிரிட்டனின் ஜோகன்னா கோன்டாவும் மோதினர்.

இதில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஜோகன்னா கோன்டாவை தோற்கடித்தார் வீனஸ்.

இதன்மூலம் கடந்த 23 ஆண்டுகளில் விம்பிள்டனில் 9-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மூத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வீனஸ்.

வெற்றிக் குறித்து வீனஸ் வில்லியம்ஸ் பேசியது:

"இங்கு நான் ஏராளமான இறுதி ஆட்டங்களை விளையாடியிருக்கிறேன். அதனால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். இதற்கு மேல் நிறைய பட்டம் வெல்ல வேண்டும் என கேட்க முடியாது. எனினும் இந்த முறை பட்டம் வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். அப்படி வென்றால் அது அற்புதமான ஒன்றாக இருக்கும். கோன்டாவுக்கு கடுமையான நெருக்கடி இருந்தது. அதேநேரத்தில் எனது அனுபவம் எனது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது' என்றார்.

மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா மற்றும் ஸ்லோவேகியாவின் மேக்தலீனா ரைபரிக்கோவா மோதினர்.

இதில் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் மேக்தலீனா ரைபரிக்கோவாவை தோற்கடித்தார்.

இதன்மூலம் 2-ஆவது முறையாக விம்பிள்டனில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் முகுருஸா.

வெற்றி குறித்து முகுருஸா பேசியது:

"நான் மிகச்சிறப்பாக ஆடினேன். அரையிறுதியில் களமிறங்கும்போது அதீத நம்பிக்கையுடன் களமிறங்கினேன். அதனால் எல்லாமே சிறப்பாக அமைந்தது. இறுதிச் சுற்றிலும் சிறப்பாக ஆட விரும்புகிறேன். நான் நினைத்தது போன்று எல்லாம் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்' என்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - கனடாவின் கேப்ரில்லா டப்ரோவ்ஸ்கி இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் குரோஷியாவின் நிக்கோலா மெக்டிக் - அனா கொஞ்ஜு இணையுடன் மோதியது. இதில் 7-6 (5), 6-2 என்ற நேர் செட்களில் நிக்கோலா மெக்டிக் - அனா கொஞ்ஜு தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது போபண்ணா – டப்ரோவ்ஸ்கி இணை.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!
IND vs NZ: கடைசி நேரத்தில் அதிரடி வீரர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. அட! மாற்று வீரர் இவரா?