ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 92ல் பண்ட்டுக்கு சனி!! தெறிக்கவிட்ட ஹோல்டர்.. மீண்டும் சதத்தை தவறவிட்ட ரிஷப்

By karthikeyan VFirst Published Oct 14, 2018, 10:34 AM IST
Highlights

மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ரஹானே, ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 
 

மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ரஹானே, ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் 4 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் பிரித்வி ஷா, இந்த போட்டியிலும் அபாரமாக பேட்டிங் செய்தார். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை சிதறடித்த பிரித்வி ஷா, 53 பந்துகளுக்கு 70 ரன்கள் குவித்து அவுட்டானார். 

கடந்த போட்டியில் சதமடித்த பிரித்வி ஷா, இந்த போட்டியில் அவசரப்பட்டு அடித்ததால் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜாரா 10 ரன்களிலும் கோலி 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

162 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு, ரஹானே-ரிஷப் பண்ட் ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தது. இருவரும் நிதானமாக சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் ரிஷப் பண்ட் 85 ரன்களுடனும் ரஹானே 75 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. 

ரஹானே, பண்ட் ஆகிய இருவருமே சதத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் மூன்றாம் நாளான இன்று காலை களத்திற்கு வந்தனர். ஆனால் ரஹானே-பண்ட் பார்ட்னர்ஷிப்பை ஹோல்டர் உடைத்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். ஹோல்டரின் அபாரமான பவுலிங்கில் ரஹானே 80 ரன்னில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். கடந்த போட்டியில் சதமடித்த ஜடேஜா, இந்த முறை டக் அவுட்டானார். ரஹானே மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் ஹோல்டர் வெளியேற்றினார். 

இதையடுத்து ரிஷப் பண்ட்டுடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிவந்த ரிஷப் பண்ட், கேப்ரியலின் பவுன்சரை அடிக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகத்தில் அடிக்க முற்பட்டு, கடந்த போட்டியில் அவுட்டான அதே 92 ரன்களில் இந்த முறையும் ஆட்டமிழந்தார். இந்த முறையும் சதமடிக்கும் வாய்ப்பை பண்ட் நழுவவிட்டார். 

இதையடுத்து அஷ்வினும் குல்தீப் யாதவும் ஆடிவருகின்றனர். இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களை கடந்து ஆடிவருகிறது. 
 

click me!