லட்சுமணன் தேர்வு செய்த சிறந்த டெஸ்ட் அணி இதுதான்!! 25 வருஷமா ஆடுனதுல இவங்கதான் பெஸ்ட்டாம்

By karthikeyan VFirst Published Aug 28, 2018, 4:03 PM IST
Highlights

கடந்த 25 ஆண்டு காலத்தில் தனது பார்வையில் சிறந்த 11 வீரர்களை கொண்ட டெஸ்ட் அணியை தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் விவிஎஸ்.லட்சுமணன். 

கடந்த 25 ஆண்டு காலத்தில் தனது பார்வையில் சிறந்த 11 வீரர்களை கொண்ட டெஸ்ட் அணியை தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் விவிஎஸ்.லட்சுமணன். 

இந்திய அணி அனைத்து காலக்கட்டத்திலுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான அணியாகவே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலை நிறுத்தி கொண்டுள்ளது. 

அதிலும் கங்குலி தலைமையில் சச்சின், டிராவிட், லட்சுமணன் ஆகியோரை கொண்ட இந்திய அணி வலுவான பேட்டிங் அணியாக திகழ்ந்தது. லட்சுமணன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்கமுடியாத வீரர். இந்திய அணிக்கு பல இக்கட்டான நேரங்களில் வெற்றியை தேடிக்கொடுத்தவர். நான்காவது இன்னிங்ஸில் பலமுறை சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்ததால், நான்காம் இன்னிங்ஸ் நாயகன் என்று அழைக்கப்படுகிறார். 

இப்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரரான லட்சுமணன், கடந்த 25 ஆண்டுகளில் தனது பார்வையில் சிறந்த வீரர்களை கொண்ட டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். இந்த அணியின் தொடக்க வீரர்களாக சேவாக் மற்றும் முரளி விஜயை தேர்வு செய்துள்ளார் லட்சுமணன். மூன்றாம் வரிசை வீரராக அந்த இடத்திற்கு பெயர்போன ராகுல் டிராவிட்டையும் நான்காம் இடத்திற்கு சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார். 

அதன்பிறகு 5, 6 மற்றும் 7வது இடங்களுக்கு முறையே கோலி, கங்குலி மற்றும் தோனியை தேர்ந்தெடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சை பொறுத்தமட்டில் புவனேஷ்வர் குமார், ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர் கானையும் அனில் கும்ப்ளேவை ஸ்பின் பவுலராகவும் தேர்வு செய்துள்ளார் லட்சுமணன்.

இந்த அணியின் கேப்டனாக கங்குலியை குறிப்பிட்டுள்ளார் லட்சுமணன். கங்குலி மற்றும் தோனியின் கேப்டன்சியில் லட்சுமணன் ஆடியுள்ளார். இருவரையும் அணியில் தேர்ந்தெடுத்த லட்சுமணன், அணி கேப்டனாக கங்குலியை தேர்வு செய்துள்ளார். 

லட்சுமணன் தேர்வு செய்த டெஸ்ட் அணி:

வீரேந்திர சேவாக், முரளி விஜய், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி(கேப்டன்), தோனி(விக்கெட் கீப்பர்), புவனேஷ்வர் குமார், அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத், ஜாகீர் கான்.
 

click me!