இதுவரை நடந்ததிலேயே தமிழகத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தான் பெஸ்ட் - விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்

By karthikeyan VFirst Published Aug 9, 2022, 2:28 PM IST
Highlights

இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடர்களிலேயே தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்ததுதான் பெஸ்ட் என்று விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்துவரும் நிலையில், இன்றுடன் போட்டிகள் முடிகின்றன. முன்பு திட்டமிட்டபடி இந்த செஸ் ஒலிம்பியாடை ரஷ்யாவில் நடத்தவேண்டாம் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு முடிவெடுத்தபின், அதை இந்தியாவில் நடத்த விரும்பி அதற்கான முன்னெடுப்புகளை எடுத்தவர் விஸ்வநாதன் ஆனந்த்.

தமிழகத்தை சேர்ந்த 5 முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தான் செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியாவில் நடக்க, அதுவும் குறிப்பாக தமிழகத்தில் நடக்க முக்கிய காரணம். கடைசி நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடத்துவது உறுதியானாலும், தமிழக அரசு வெறும் நான்கே மாதங்களில் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தது.

செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் மிகச்சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடந்துவந்த நிலையில், இன்றுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிவடைகிறது. இறுதிச்சுற்று இன்று நடந்துவருகிறது. மாலை 6 மணிக்கு நிறைவுவிழா நடக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் நடந்துவரும் இதேவேளையில், சென்னையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பிற்கான தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்வும் நடைபெற்றது. அதில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் அர்காடி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், செஸ் போட்டிகளை காண மக்கள் இந்தளவிற்கு கூட்டம் கூட்டமாக வந்ததை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடந்ததில் கூடுதல் பெருமை. இதுவரை நடந்ததிலேயே இந்த செஸ் ஒலிம்பியாட் தான் பெஸ்ட் என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். 

செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை வெறும் 4 மாதங்களில் சிறப்பாக செய்து முடித்த தமிழக அரசுக்கு நன்றி. சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக, இந்தியாவிற்கு செஸ் விளையாட்டில் என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ செய்வேன். இந்தியாவில் இளைஞர்கள் சிறப்பாக செஸ் ஆடிக்கொண்டிருப்பதால் இது செஸ்-ஸில் இந்தியாவிற்கு நல்ல காலம் என்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
 

click me!