ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெல்லாமல் ஓயமாட்டோம்!! கேப்டன் கோலி திட்டவட்டம்

By karthikeyan VFirst Published Dec 30, 2018, 2:09 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என்றும் அதனால் இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்த இந்திய அணி, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது இந்திய அணி. ஆஸ்திரேலியாவில் இதுவரை டெஸ்ட் தொடரை ஒருமுறை கூட வென்றிராத இந்திய அணியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் தொடரை இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் வென்று தாங்கள் நம்பர் 1 அணிதான் என்று நிரூபிக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்திய அணியின் பொறுப்பை மேலும் அதிகரித்தது. 

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என்றும் அதனால் இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 

இதையடுத்து தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மெல்போர்னில் நடந்த மூன்றாவது போட்டியை எதிர்கொண்டது. மெல்போர்ன் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 37 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை மெல்போர்னில் வீழ்த்தி சாதனை படைத்தது. 

இந்த போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி, நாங்கள் இந்த வெற்றியுடன் நின்றுவிட போவதில்லை. இந்த வெற்றி எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நாங்கள் வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலுமே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அதனால் தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளோம். ஆனால் இத்துடன் இது முடியவில்லை. சிட்னியில் நடக்க உள்ள கடைசி போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றுவதுதான் இலக்கு என கோலி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

click me!