உலகின் சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யுனிட்டை எதிர்கொண்டு ஆடிகிட்டு இருக்கோம்!! இந்திய பவுலர்களுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் புகழாரம்

By karthikeyan VFirst Published Dec 30, 2018, 12:37 PM IST
Highlights

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் புகழ்ந்து பேசியுள்ளார்.
 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய அணி முன்னெப்போதையும் விட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதை பல முன்னாள் ஜாம்பவான்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பவுலர்கள் கூட இதை ஒப்புக்கொண்டுள்ளனர். பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த நல்ல கலவையிலான வேகப்பந்து வீச்சு யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது.

எந்த மாதிரியான பவுலிங்குக்கு எடுபடுகிற ஆடுகளமாக இருந்தாலும் அந்த மாதிரியான பவுலர்களை களமிறக்குமளவிற்கு திறமைமிகு வேகப்பந்து வீச்சு யூனிட்டாக உள்ளது. அதிலும் பும்ராவின் பவுலிங் மிகவும் அபாரமானது. எதிரணி வீரர்களை தனது வேரியேஷனுடனான வேகத்தின் மூலம் தெறிக்கவிடுகிறார். ஆஸ்திரேலியாவில் ஷமியும் பும்ராவும் அபாரமாக வீசிவருகின்றனர். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான பும்ரா, 48 விக்கெட்டுகளை வீழ்த்தி, அறிமுக ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் மூன்றாமிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா என அனைத்து அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் பெரும்பாலான போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும் இந்திய பவுலர்கள் வீழ்த்தியுள்ளனர். இதுவே மிகப்பெரிய விஷயம்தான். இதுவே இந்திய பவுலர்களின் திறமையை பறைசாற்றுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பவுலிங் தான் முக்கிய காரணம். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்தார் பும்ரா. பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார் பும்ரா.

போட்டிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், எங்கள் அணியின் பேட்டிங் வரிசை அனுபவமற்றது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு நாங்கள் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்று இந்திய பவுலர்களுக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அனுபவமற்ற பேட்டிங் வரிசையை பெற்றிருப்பதால், எப்போதுமே பேட்டிங் ஆர்டர் குறித்த விவாதங்கள் நடந்துகொண்டுதான் இருப்பதாக தெரிவித்தார். சிட்னியில் நடக்க உள்ள அடுத்த டெஸ்ட் போட்டியில் கடும் சவால் காத்திருப்பதால் நல்லதை வளர்த்துக்கொண்டு தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்று நம்பிக்கையுடன் பேசினார்.

click me!