#KKRvsRCB என்ன மாதிரியான மிரட்டல் பௌலிங்... தமிழக வீரரை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி..!

By vinoth kumarFirst Published Sep 21, 2021, 12:41 PM IST
Highlights

வருண் சக்ரவரத்தியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. நான் இந்த நேரத்தில் கூறுவது என்னவென்றால், இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை போட்டியில் வருண் ஆடும்போது, முக்கியத் துருப்புச்சீட்டாக இருப்பார்.

டி20 உலகக் கோப்பை அணியில் வருண் சக்கரவர்த்தி எவ்வளவு முக்கியமான வீரராக இருக்கப் போகிறார் என்பதை விராட் கோலி வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஐ.பி.எல் 14-வது சீசனின் 31-வது ஆட்டம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக மோசமான ஆட்டத்தை பெங்களூரு பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினர். இதில், கோலி, படிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என அனைவரும் அடுத்தடுத்து வெளியேறினர். 19 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் வருண் சக்ரவரத்தி 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதனையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக ஷப்மன் கில், வெங்கடேஷ் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் மற்றும் வெங்கடேஷ் விக்கெட் இழக்காமல் ரன்களைக் குவித்தனர். விக்கெட் இழப்பின்றி வெற்றியை நெருங்கிய நிலையில் கில் 48 ரன் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரூ ரஸல் களமிறங்கினார். ரஸல் ஸ்ரைக்குக்கு வந்து பந்தை எதிர்கொள்வதற்கு முன்பே வெங்கடேஷ் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து கொல்கத்தாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனையடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

 

போட்டி முடிந்த பிறகு ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டியளிக்கையில்;- வருண் சக்ரவரத்தியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. நான் இந்த நேரத்தில் கூறுவது என்னவென்றால், இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை போட்டியில் வருண் ஆடும்போது, முக்கியத் துருப்புச்சீட்டாக இருப்பார்.

அனைத்து இளைஞர்களிடம் இருபோன்ற திறமையான ஆட்டத்தை நாங்கள் பார்ப்பது அவசியமாகிறது. இந்திய அணியின் காத்திருப்பில் உள்ள வீரர்களின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர் போன்ற திறமையான வீரர் எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார், அவரது இந்த செயல்பாடு அதற்கு ஒரு பெரிய அறிகுறியாகும் என்றார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஏராளமான பனிப்பொழிவு இருக்கும் என நினைக்கவில்லை, நாங்கள் கணிக்கவும் இல்லை. ஆடுகளம் நன்றாகஇருந்ததால்தான், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தேன் என்றார். 

கேப்டன் விராட் கோலியே இவ்வளவு வெளிப்படையாக டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியில், வருண் சக்கரவர்த்தி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருக்கப் போகிறார் என்பதை இப்போதே தெளிவுப்படுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!