பிரிஜ் பூஷனுக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. மத்திய அமைச்சர் தகவல்

By Ramya sFirst Published Jun 7, 2023, 7:04 PM IST
Highlights

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அவரை உடனடியாக கைது செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். பிரிஜ் பூஷன் சிங் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயற்சிக்க, வினோத் போகத், பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் ஆகியோரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். மேலும் சில மல்யுத்த வீரர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், கிரிக்கெட் பிரபலங்கள், விவசாய சங்கத்தினர் என பல்வேறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். 

கையில் மொபைல் உடன் செல்ஃபி எடுக்க விராட் கோலியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்!

இந்த சூழலில் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்திய நிலையில், சாக்‌ஷி மாலிக் போராட்டத்தை விட்டு விலகியதாக தகவல் வெளியாகியது.இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த சாக்‌ஷி மாலிக், நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும் என்றும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தார். 

இந்நிலையில் பிரிஜ் பூஷனுக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 வரை எந்தவித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என்று மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார். 15-ம் தேதியுடன் பிரிஜ் பூஷன் மீதான வழக்கு விசாரணை முடியும் என்று தெரிவித்துள்ள நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் தங்களின் போராட்டம் ஓயவில்லை என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்த பின் வீரர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்களை சந்தித்த பின் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “ நான் மல்யுத்த வீரர்களுடன் நீண்ட 6 மணி நேரம் கலந்துரையாடினேன். ஜூன் 15ம் தேதிக்குள் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என மல்யுத்த வீரர்களுக்கு உறுதி அளித்துள்ளோம். மல்யுத்த சம்மேளன அமைப்பின் தேர்தல் ஜூன் 30 ஆம் தேதிக்குள் நடைபெறும்.

மல்யுத்த சம்மேளனத்தின் உள் புகார் குழு ஒரு பெண் தலைமையில் அமைக்கப்படும். மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எஃப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும். 3 முறை பதவி வகித்த பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்றும் மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் ஜூன் 15ஆம் தேதிக்கு முன் எந்தப் போராட்டத்தையும் நடத்த மாட்டார்கள்.” என்று தெரிவித்தார். 

4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்!

click me!