தி ரியல் “Chak De India" ஹீரோ.. கிரேட் ”ராகுல் டிராவிட்”

 
Published : Feb 03, 2018, 04:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
தி ரியல் “Chak De India" ஹீரோ.. கிரேட் ”ராகுல் டிராவிட்”

சுருக்கம்

the great rahul dravid is the real hero of chak de india

ஷாருக் கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் Chak De India. இந்த திரைப்படத்தில், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஷாருக் கான் நடித்திருப்பார். இப்படத்தில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக ஷாருக் கான் இருந்தபோது பாகிஸ்தானிடம் இந்திய அணி உலக கோப்பையை தோற்றுவிடும்.

அதனால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகும் ஷாருக் கானுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உலக கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற வேட்கையில் இருக்கும் ஷாருக் கான், அணியின் வீராங்கனைகளிடம் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். அவரின் கண்டிப்பு வீராங்கனைகளுக்கு பிடிக்காவிட்டாலும் கூட நாளடைவில் அவர் கண்டிப்பாக இருப்பதன் நோக்கத்தை உணர்ந்து செயல்படுவர். இறுதியில் பெண்கள் ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றுவிடும்.

தான் கேப்டனாக இருக்கும்போது வெல்ல முடியாத உலக கோப்பையை பயிற்சியாளராக இந்திய அணிக்கு பெற்று கொடுத்ததை நினைத்து ஷாருக் மகிழ்ச்சியடைவார்.

அந்த படத்தில் வரும் ஷாருக் கானின் நிஜ கேரக்டர் தான் ராகுல் டிராவிட். கிரிக்கெட்டின் மீது தீராத ஆர்வமும் வெற்றியடைய வேண்டும் என்ற வேட்கையும் மற்ற வீரர்களிடமிருந்து டிராவிட்டை சற்றே உயர்த்தி காட்டும்.

Chak De India படத்திற்கும் டிராவிட் பயிற்சியளித்து இந்திய ஜூனியர் அணி, உலக கோப்பை வென்றதற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. 

தோல்வியால் கண் கலங்கிய டிராவிட்:

ஷாருக்கான் கேப்டன்சிப்பில் ஹாக்கி உலக கோப்பையை இழந்தபோது ஷாருக் கான் அழுவார்.

2007ம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையின் போது டிராவிட்டின் தலைமையில் இந்திய அணி களம் கண்டது. டிராவிட்டின் கேப்டன்சிப்பில் களமிறங்கிய இந்திய அணி, உலக கோப்பையின் முதல் சுற்றிலேயே வெளியேறியது. வங்கதேசத்துக்கு எதிராக தோற்ற இந்திய அணி, பெர்முடாவுக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. ஆனால், இலங்கைக்கு எதிராக தோற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல், வெளியேறியபோது டிராவிட் கண்ணீர் விட்டு அழுதார். அதன்பிறகு கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். தோனி கேப்டனானார்.

அந்த உலக கோப்பைக்கு பிறகு டிராவிட் சில காலங்கள் விளையாடினாலும் கூட அதுவே அவரது சர்வதேச கிரிக்கெட்டின் கடைசி அத்தியாயமானது.

பிரதான அணிக்கு பயிற்சியளிக்க மறுப்பு:

பொதுவாகவே ஆண்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அளவுக்கு பெண்கள் விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை. இதை கதைக்களமாக கொண்ட Chak De India படத்தில், பெண்கள் அணிக்கு பயிற்சியளிக்கும் ஷாருக் கானையும் அந்த அணியையும் குறைவாக மதிப்பிடுவர். ஆனால், பெண்கள் அணிக்கு பயிற்சியளித்து சாம்பியனாக்குவார் ஷாருக் கான்.

இதை டிராவிட்டுடன் நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும் மறைமுகமாக கிட்டத்தட்ட இதுபோன்றதொரு, ஆனால் வேறு கோணத்திலான விஷயத்துடன் ஒப்பிட முடியும். 

கடந்த ஆண்டில், இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிந்ததும் புதிய பயிற்சியாளர் பதவிக்கு, கும்ப்ளே, ரவி சாஸ்திரி, சேவாக் உள்ளிட்ட வீரர்கள் விண்ணப்பித்தனர். ஜூனியர் அணியின் பயிற்சியாளராக இருக்கும் டிராவிட் விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிராவிட் விண்ணப்பிக்கவில்லை. (விண்ணப்பித்திருந்தால் அவர் தான் பயிற்சியாளர்) ஆனால் டிராவிட், இந்திய அணிக்கு பயிற்சியளிப்பதை விட இந்திய அணிக்கு சிறந்த வீரர்களை உருவாக்கி கொடுப்பதை பிரதான பணியாகவும் கடமையாகவும் கருதினார்.

கண்டிப்பு:

Chak De India படத்தில், வீராங்கனைகளிடம் பயிற்சியாளரான ஷாருக் கான் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார். சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளை இலக்காக கொண்டு அந்த வேட்கையை அவர்களிடம் விதைத்து வளர்ப்பார்.

அதேபோல தான் டிராவிட்டும்.. இந்த தொடர் முழுதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதென்றால், அது சாதாரண விஷயமல்ல. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியை இதற்காக தயார் செய்துவருகிறார் டிராவிட். உலக கோப்பை தொடங்கியது முதல் இறுதி போட்டி வரை, வீரர்கள் யாரும் போன் பயன்படுத்த கூடாது என தெரிவித்து விட்டார். வீரர்களின் கவனம் சிதறக் கூடாது என்பதற்கான நடவடிக்கைதான் இதுவே தவிர, அவர்களை அடிமைப்படுத்த வேண்டும் என்பதல்ல. 

இதுபோன்று கண்டிப்புடன் நடந்துகொண்டாலும், டிராவிட் சிறந்த பல ஆலோசனைகளையும் மன வலிமையையும் இந்திய வீரர்களுக்கு கண்டிப்பாக புகுத்தியிருப்பார். அதன் விளைவுதான்.. தொடர் முழுதும் ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்று, இந்திய அணி சாம்பியன் ஆனது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!