தங்கமகன் நீரஜ் : அவன் நெஞ்சில் பாய்ந்த ஈட்டிகள் உரமானது.. விண்ணில் எறிந்த ஈட்டி தங்கமானது..

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2021, 6:46 PM IST
Highlights

இந்த ஒலிம்பிக் போட்டியில் 90 மீட்டர் அல்லது அதற்கும் கூடுதலாக ஈட்டி எறிந்து நாட்டிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தருவார் என்று ஒட்டுமொத்த தேசமும் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில்

முழங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய காயத்தால் ஒரு வருடம் ஓய்வில் இருந்த  நீராஜ் இனி விளையாடவே முடியாது என பலர் விமர்சித்து வந்தநிலையில் அதில் இருந்து  மீண்டு தன் விடாமுயற்சியால்,  ஒலிம்பிக்கில் அதிக தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் பெற்று கொடுத்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் ஆனந்த கடலில் ஆழ்த்தியுள்ளது.

நீரஜ் சோப்ராவின் உச்சபட்ச ரெக்கார்டு 88.06 மீட்டர், ஆசிய போட்டிகளில் இது அவர் செய்த சாதனை. ஆனால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற போட்டி ஒன்றில் தனது சாதனையை அவரே முறியடித்தார்.முன்னதாக அவர் கையில் ஏற்பட்ட காயத்தால் அவர் இனி விளையாடவே முடியாது என பலரும் விமர்சித்து வந்த நிலையில்,  ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு அவர் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். 

சரியாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக அவருக்கு ஏற்பட்ட இந்த சோதனை அவருக்கு வலியை மட்டுமல்ல அவமானத்தையும் கொடுத்தது. ஆனால் முழங்கை காயத்தால் தனது பழைய டெக்னிக்குகளை கைவிட்ட அவர் புதிய டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கினார். அதேபோல் காயம் தந்த படிப்பினையால்,  அதுவரை பயன்படுத்தி வந்த பழைய ஈட்டிக்கு மாற்றாக புதிய மாடலின் தயாரிக்கப்பட்ட ஈட்டியை பயன்படுத்த தொடங்கினார்.

நாட்டிற்கு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவில் இருக்கும் எவருமே இதுபோன்ற டெக்னிக் முறைகளை மாற்றுவது, புதிய ஈட்டியை கையாள்வது  போன்ற அமில சோதனைகளில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் தனது மனதுக்குப் சரி என்று தோன்றியதை துணிச்சலாக முடிவெடுத்த நீரஜ் தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்த போட்டியில் கலந்து கொண்டதுமே எடுத்த எடுப்பிலேயே தனது அசாத்திய திறமைகளை வெளிபடுத்திய அவர் மீது நாட்டு மக்களின் நம்பிக்கை பார்வை படரத் தொடங்கியது. தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அடித்து தூள்துளாக்கி படிப்படியாக முன்னேறி இறுதிப் போட்டிக்கு வந்தார் நீரஜ்.  

இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் 90 மீட்டர் அல்லது அதற்கும் கூடுதலாக ஈட்டி எறிந்து நாட்டிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தருவார் என்று ஒட்டுமொத்த தேசமும் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், இன்று இறுதிப் போட்டியின்  விளையாடி அவர், அதன் முதல் சுற்றில் 87.3 மீட்டர் தூரம் தூக்கி வீசினார். இரண்டாவது சுற்றில் 87.58 மீட்டர் தொலைவுக்கு வீசினார் .மூன்றாவது சுற்றில் 76. 79 மீட்டர் தூரத்திற்கும் வீசினார்.

ஆறு சுற்றுகளிலும் சிறப்பாக வீசினார் நீரஜ். ஆனால் இறுதிவரை எந்த நாட்டு வீரரும் அவர் இரண்டாவது சுற்றில் வீசிய 87.5 8 மீட்டர் தூரத்திற்கு வீசவில்லை, எனவே அதிக தொலைவிற்கு ஈட்டி வீசிய சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்து தங்க மகனாக சோப்ரா உயர்ந்துள்ளனர். தன் நெஞ்சில் பாய்ந்த ஈட்டிகளை தாங்கியதால், அவர் விண்ணில் எறிந்த ஈட்டி தங்க பதக்கம் பெற்றுத் தந்திருக்கிறது. 

 

click me!