டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடைபெறும்…

First Published Dec 15, 2016, 11:17 AM IST
Highlights


இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அறிவித்துள்ளது.

வர்தா புயல் காரணமாக சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் பாதிக்கப்பட்டுள்ளதால், நிலக்கரி தனல் மூலம் அதை உலர வைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் தொடங்குகிறது.

சென்னையை கடந்த திங்கள்கிழமை புரட்டிப் போட்ட வர்தா புயல், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தையும் விட்டுவைக்கவில்லை. இதனால் இரு அணி வீரர்களும் பயிற்சி பெற முடியவில்லை. புதன்கிழமை முழுவதும் இரு அணியினரும் ஹோட்டலுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் "அவுட் பீல்டு'க்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றபோதிலும், ஆடுகளம் (பிட்ச்) சேதமடைந்துள்ளது. இதனால் இரும்பு டிரேக்களில் நிலக்கரி தனலை பரப்பி ஆடுகளத்தை உலர வைக்கும் பணியில் மைதான ஊழியர்கள் புதன்கிழமை தீவிரமாக ஈடுபட்டனர். போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சேப்பாக்கம் மைதானத்தில் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்திய அணியினரின் பயிற்சி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து வீரர்கள் பகல் 12.30 மணியளவில் பயிற்சியை தொடங்கவுள்ளனர்.

பிசிசிஐ தெற்கு மண்டல மைதான பராமரிப்பாளர் பி.ஆர்.விஸ்வநாதன் கூறுகையில், "22 யார்ட் ஆடுகளம் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. "அவுட் ஃபீல்டும்' நல்ல நிலையில் உள்ளது. நிச்சயமாக போட்டி நடைபெறும். ஆனால் ஆடுகளத்தின் தன்மை எப்படியிருக்கும்? சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமா என்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது' என்றார்.

சென்னை டெஸ்ட் போட்டிக்கான ஏற்பாட்டு பணிகளை கவனித்து வரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலர் காசிவிஸ்வநாதன், போட்டிக்கு முன்னதாக மைதானம் தயாராகிவிடும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மைதானத்தின் நிலை மோசமாக இருந்தது. ஆனால் துரித வேகத்தில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு போட்டியை நடத்துவதற்கு ஏற்ற வகையில் மைதானத்தை தயார் செய்திருப்பது மனநிறைவு அளிக்கிறது.

டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏறக்குறைய  முடிக்கப்பட்டுவிட்டன. அதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.

மைதானத்தில் போதுமான வடிகால் வசதி இருப்பதால் தண்ணீர் தேங்கவில்லை. அதநேரத்தில் பயிற்சி ஆடுகங்களை உரிய நேரத்தில் தயார் செய்ய முடியவில்லை. அதனால் வியாழக்கிழமை இரு அணியினரும் பீல்டிங் பயிற்சியில் மட்டுமே ஈடுபடுவார்கள் என்றார்.

tags
click me!