கோயில்களுக்கும், பண்டிகைகளுக்கும் செலவிடும் நாட்டில், விளையாட்டு வீரர்களுக்கான நிதி இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது…

First Published Jan 9, 2017, 12:45 PM IST
Highlights


கோயில்களுக்கும், பண்டிகைகளுக்கும் செலவிடும் நாட்டில், விளையாட்டு வீரர்களுக்கான நிதி இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தமிழ்நாடு டென்னிஸ் சங்க துணைத் தலைவர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்தியாவில் 6 சிறந்த டென்னிஸ் வீரர்களுக்கு செலவிட ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 கோடியே போதுமானது. கோயில்களுக்கும், பண்டிகைகளுக்கும் செலவிடும் நாட்டில், விளையாட்டு வீரர்களுக்கான நிதி இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.

அதற்கான தகுந்த முயற்சிகளை மேற்கொள்வதில் தான் ஆர்வம் இல்லை. இந்தியாவில் தரமான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் வீரர்கள் இல்லையென்றால், ஏஐடிஏவிடம் இருந்து உரிய ஆதரவு கிடைக்காததே அதற்குக் காரணம்.
யூகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல், தக்ஷினேஷ்வர் சுரேஷ், நிதின் சின்ஹா போன்ற சிறந்த வீரர்கள் பொதுவான பயிற்சியாளர் கொண்டு பயிற்றுவிக்கப்பட வேண்டும். அவர்கள் ஓர் ஆண்டில் 26 போட்டிகளில் விளையாட வேண்டும். அதில் 18 போட்டிகளாவது வெளிநாடுகளில் நடைபெறுவதாக இருக்க வேண்டும். அதற்காக 20 வாரங்கள் பயிற்சி எடுக்கும் அவர்களுக்கு, 6 வாரங்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் செய்ய ரூ.3 கோடி இருந்தாலே போதுமானது.

ஏஐடிஏ தனது செல்வாக்கை பயன்படுத்தி வளர்ச்சி நிதியாக ரூ.50 கோடி திரட்டலாம். அதை அரசு வங்கியில் வைப்பு செய்து, ஆண்டுக்கு ரூ.4 கோடி வட்டியாகப் பெறலாம்.

அதேபோல், அதிக வீரர்களுக்கு குறைவான ஊக்கத் தொகை அளிப்பதை விட, திறமை வாய்ந்த சில வீரர்களுக்கு அதிக ஊக்கத் தொகை அளிப்பது பலனைத் தரும்.

கர்மான் தண்டி, ஸ்னேகாதேவி ரெட்டி போன்ற வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்கக் கோரி, சிறந்த 50 பெண் தொழிலதிபர்களுக்கு கடிதம் எழுதினேன். அதற்கு ஒருவரிடம் இருந்து மட்டுமே பதில் வந்தது. இதையே ஏஐடிஏ முயற்சித்திருந்தால் நல்லதொரு பலன் கிடைத்திருக்கும்.

அதேபோல், ஒரு விளையாட்டின் வளர்ச்சிக்கு போட்டிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதை பிரபலப்படுத்துவதும் அவசியம்.

சாய்னா, சிந்து போன்ற வீராங்கனைகள் விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்ப்பதால் தான் பாட்மிண்டன் தற்போது அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேபோல் டென்னிஸ் வீரர்கள் விளையாடுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

tags
click me!