
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 3ஆவது நாளான இன்று இந்தியா துப்பாக்கி சுடுதலில் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்றது. இதில், மகளிருக்கான போட்டியில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் 7ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இதே போன்று ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா வீரர் அர்ஜூன் பாபுதா 4ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதையடுத்து ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீரரான பிரித்விராஜ் தொண்டைமான் போட்டியிட்டார்.
இது அவரது முதல் ஒலிம்பிக் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. 37 வயதான தொண்டைமான், 3 சுற்றுகள் முடிவில் ஸ்வீடனின் லெவின் ஆண்டர்சன் பெற்ற புள்ளிகளை விட 6 புள்ளிகள் குறைவாக 68 புள்ளிகள் பெற்றுள்ளார். லெவின் ஆண்டர்சன் 74 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சிறந்த பதக்க வாய்ப்புகளில் ஒருவராக தொண்டைமான் கருதப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்க்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
இதே போன்று 2023ஆம் ஆண்டு ISSF உலகக் கோப்பையில் ஆண்களுக்கான டிராப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில், தோஹாவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பையில் ட்ராப் பிரிவில் மற்றொரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் 68 புள்ளிகள் பெற்று 30ஆவது இடத்தில் உள்ளார். இதிலிருந்து மீண்டு வர நாளையும் வாய்ப்புள்ளதால் எப்படியும் பிரித்விராஜ் தொண்டைமான் பதக்க சுற்றுக்கு தகுதி பெற்று இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.