தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் 4 நாட்களுக்கு பிறகு 14 தங்க பதக்கங்களுடன் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது, தமிழ்நாடு 12 தங்க பதக்கங்களுடன் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 5600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 பகுதிகளில் இந்த கேலோ விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டு போட்டிகளில் கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், பாக்ஷிங் (குத்துச்சண்டை), ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல் (ரைபிள், பிஸ்டல்), துப்பாக்கிச்சுடுதல் (ஷாட் ஹன்), வாலிபால், பளுதூக்குதல், கோ கோ, வில்வித்தை, பேட்மிண்டன் என்று பல பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த 6ஆவது சீசனுக்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் மொத்தமாக 26 விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இதில், மொத்தம் 933 பதக்கங்கள் - 278 தங்கம், 278 வெள்ளி மற்றும் 377 வெண்கலம் பதக்கங்கள் கொடுக்கப்படுகிறது. முதல் முறையாக இந்த ஆண்டு ஸ்குவாஷ் இந்த கேலோ விளையாட்டில் இடம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு தற்காப்புக் கலைகளின் ஒரு வடிவமான சிலம்பம் செயல் விளக்க விளையாட்டாக இந்த கேலோவில் இடம் பெற்றுள்ளது.
இந்த கேலோ விளையாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன. இந்த கேலோ விளையாட்டை நடத்தும் தமிழ்நாடு 559 தடகள வீரர்களுடன் களமிறங்கியுள்ளது. மூன்று முறை சாம்பியனான மகாராஷ்டிரா 415 வீரர்களுடன் களமிறங்கியுள்ளது. இரண்டு முறை சாம்பியனான ஹரியானா, 491 விளையாட்டு வீரர்களை போட்டியில் களமிறக்கியது.
கடைசியாக மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் 5ஆவது சீசனில் மகாராஷ்டிரா 56 தங்கம், 55 வெள்ளி மற்றும் 50 வெண்கலம் என்று மொத்தம் 161 பதக்கங்களை வென்றது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைத் தவிர வேறு எந்த அணியும் இன்று வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் இந்த 6ஆவது சீசனுக்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் மகாராஷ்டிரா 14 தங்கம், 15 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என்று மொத்தமாக 45 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு, 12 தங்கம், 3 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என்று மொத்தமாக 31 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஹரியான 7 தங்கம், 6 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என்று 32 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும், டெல்லி 7 தங்கம், 6 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என்று மொத்தமாக 19 பதக்கங்கள் கைப்பற்றி 4ஆவது இடத்திலும், பஞ்சாப் 6 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என்று மொத்தமாக 18 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.