இந்தியாவை ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மரண அடி கொடுத்தது இலங்கை...

 
Published : Dec 11, 2017, 09:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
இந்தியாவை ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  மரண அடி கொடுத்தது இலங்கை...

சுருக்கம்

Sri Lanka defeated India by seven wickets

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா - இலங்கை மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் இமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 38.2 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அடுத்து பேட் செய்த இலங்கை 20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச தீர்மானித்தது.  இந்திய அணியின் வழக்கமான தொடக்க ஜோடியான ரோஹித் - தவன் பேட்டிங்கை தொடங்கினர். இதில் தவன் டக் ஔட் ஆனார். அவர் மேத்யூஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் களத்திற்கு வர, மறுமுனையில் கேப்டன் ரோஹித் இரண்டு ஓட்டங்களில் வெளியேறினார்.  அவர் லக்மல் வீசிய பந்தில் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், லக்மலின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். பின்னர் வந்த மணீஷ் பாண்டே இரண்டு ஓட்டங்களுக்கு ஔட்டானார்.

பின்னர் தோனி களமாட வந்த நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் ஒரு பவுண்டரியுடன் ஒன்பது ஓட்டங்களுக்கு நுவான் பிரதீப் பந்துவீச்சில் போல்டானார். இவ்வாறாக இந்தியா 16 ஓட்டங்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய தோனி, விக்கெட் சரிவை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். உடன் நின்ற ஹார்திக் பாண்டியா இரண்டு பவுண்டரிகள் விளாசி, 10 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த புவனேஸ்வர் குமார் டக் அவுட் ஆனார். இதனிடையே தோனி 78 பந்துகளில் அரைசதம் கடந்தார். பாண்டியாவை அடுத்து வந்த குல்தீப் யாதவ் 4 பவுண்டரிகள் உள்பட 19 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் வந்த பும்ரா டக் ஔட்டாக, கடைசி விக்கெட்டாக 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 65 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் தோனி.

இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் அதிகபட்சமாக 4, நுவான் பிரதீப் 2 விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து, 113 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இலங்கையில் தொடக்க வீரர் குணதிலகா ஒரு ஓட்டத்தில் வெளியேற, உடன் வந்த உபுல் தரங்கா அரைசத வாய்ப்பை நழுவவிட்டு 10 பவுண்டரிகள் உள்பட 49 ஓட்டங்களில் வெளியேறினார்.

மூன்றாவது வீரராக களம் கண்ட திரிமானி டக் ஔட் ஆனார். இறுதியில் மேத்யூஸ் - டிக்வெல்லா இணை அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது.

அந்த இணை 20.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்கள் எடுத்து வென்றது இலங்கை.

மேத்யூஸ் 5 பவுண்டரிகள் உள்பட 25 ஓட்டங்கள், டிக்வெல்லா 5 பவுண்டரிகள் உள்பட 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய தரப்பில் புவனேஸ்வர், பும்ரா, பாண்டியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பேட் செய்த இந்திய அணியில் நான்கு வீரர்கள் டக் ஔட்டாக எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த ஆட்டத்தில் தோனி மட்டும் இறுதிவரை நின்று ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியதால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?