தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக 1000 ஓட்டங்கள் குவித்த ஸ்மித்…

First Published Dec 30, 2016, 11:56 AM IST
Highlights


மெல்போர்ன் டெஸ்டில் சதமடித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 1000 ஓட்டங்கள் குவித்தவர் என்ற பெருமையையும் பெற்றார். இவர், 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் 1,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 113.5 ஓவர்களில் 6 விக்கெட் 465 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 22 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 100 ஓட்டங்கள் குவித்து களத்தில் உள்ளார். அதேநேரத்தில் இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளதால் இந்தப் போட்டி டிராவில் முடிவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 126.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அசார் அலி ஆட்டமிழக்காமல் 205 ஓட்டங்கள் குவித்தார்.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட், ஜாக்சன் பேர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் சதமடிக்க, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 58 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 95, ஸ்மித் 10 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

4-ஆவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கவாஜா 3 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார். அவர் 165 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் எடுத்து ரியாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஸ்மித்துடன் இணைந்தார் ஹேண்ட்ஸ்காம்ப். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 92 ஓட்டங்கள் சேர்த்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 90 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, மேடின்சன் களம்புகுந்தார். இதன்பிறகு ஸ்மித் 96 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் ஆஸ்திரேலியா 94-ஆவது ஓவரில் 400 ஓட்டங்களை எட்டியது.

மேடின்சன் 22 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் யாசிர் ஷா பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து வந்த மேத்யூ வேட் 9 ஓட்டங்களில் நடையைக் கட்ட, மிட்செல் ஸ்டார்க் களம்புகுந்தார்.

இதனிடையே வேகமாக ஓட்டங்கள் சேர்த்த ஸ்மித் 168 பந்துகளில் சதத்தை எட்டினார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 17-ஆவது சதமாகும்.

ஆஸ்திரேலியா 113.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 465 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிடவே, 4-ஆவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ஸ்மித் 100, மிட்செல் ஸ்டார்க் 7 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் தரப்பில் சோஹைல் கான், யாசிர் ஷா, வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
மெல்போர்ன் டெஸ்டில் சதமடித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 1000 ஓட்டங்கள் குவித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.

இவர், 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் 1,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இதன்மூலம் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் 1,000 ஓட்டங்கள் குவித்தவர்களான பிரையன் லாரா (2003-2005), மார்கஸ் டிரெஸ்கோதிக் (2003-2005), கெவின் பீட்டர்சன் (2006-2008) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார் ஸ்மித்.

ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் (2001-2005) 1000 ஓட்டங்கள் குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

tags
click me!