Sky247: PSL : இந்தியர்களின் பணத்தில் நடத்தப்படும் பாகிஸ்தான் டி20 சூப்பர் லீக்: வெளியான புதிய பகீர் தகவல்கள்

By Pothy RajFirst Published May 16, 2022, 1:49 PM IST
Highlights

Sky247 :  PSL :  கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் பரமவைரிகள், இரு நாடுகளுக்கு இடையே அரசியல் மோதல்கள், எல்லைப் பிரச்சினை போன்றவை காரணமாக இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பி ஏறக்குறைய 10ஆண்டுகள் ஆகிவிட்டன. இரு நாடுகளும் தத்தமது நாடுகளுக்கு டூர் செல்லவில்லை. 

கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் பரமவைரிகள், இரு நாடுகளுக்கு இடையே அரசியல் மோதல்கள், எல்லைப் பிரச்சினை போன்றவை காரணமாக இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பி ஏறக்குறைய 10ஆண்டுகள் ஆகிவிட்டன. இரு நாடுகளும் தத்தமது நாடுகளுக்கு டூர் செல்லவில்லை. 

ஆனால், பாருங்கள்! பாகிஸ்தான் டி20 சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியே இந்தியர்கள் பணத்தால்தான் நடக்கிறது என்ற அதிர்சசிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஸ்பான்ஸர் செய்வதே இந்தியர்கள் பணம்தான் என்றால் வியப்பாக இருக்கிறதா

ஸ்கை247.நெட்(sky247.net) என்ற ஆன்-லைன் சூதாட்டத் தளம்தான் பாகிஸ்தான் டி20 சூப்பர் லீக் போட்டிகளுக்கு ஸ்பான்ஸர் செய்து வருகிறது. இந்த சூதாட்ட தளத்துக்கு கிடைக்கும் 70 சதவீதம் வருமான இந்தியர்கள் மூலம்தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூதாட்ட தளம்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக்கையே நடத்துகிறது. ஏறக்குறைய 3.30 கோடிடாலர் அதாவது ரூ2,640 கோடி மதிப்புள்ள இந்தியப் பணம் பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் புரள்கிறது.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ பேமெண்ட்களான பேடிஎம், போன்பே, ஐஎம்பிஎஸ், ஏர்டெல், யுபிஐ,ஜிபே, அஸ்ட்ரோ பே என பல்வேறு பேமெண்ட் செயலிகள் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட பணம் செலுத்தலாம். ஆன்-லைன் சூதாட்டம் வெட்ட வெளிச்சமாக நடக்கிறது. 

கடந்த ஆண்டு அபுதாபியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி மோதிய டி20 தொடருக்கும் டைட்டில் ஸ்பான்ஸர் ஸ்கை247.நெட் நிறுவனம்தான்.  இந்தத் தகவல் இந்தியர்களின் ரணத்தில் மேலும் மிளகாய்பொடி பூசியதுபோல் இருக்கிறது. இந்தியர்களின் பணத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவில் முதலீடு செய்யாமல், பாகிஸ்தானில் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்காக ஸ்பான்ஸர் செய்து சம்பாதித்து வருகிறது ஸ்கை247.நெட் நிறுவனம். இதன் மூலம் இந்தியச் சந்தையையே கொலை செய்து வருகிறது ஸ்கை247 நிறுவனம்.

பாகிஸ்தான் டி20 சூப்பர் லீக்கை மட்டும் ஸ்கை247.நெட் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்யாமல் இலங்கையில் நடத்தப்படும் லங்கா ப்ரீமியர் லீக்கையும் நடத்த ஸ்பான்ஸர் செய்து வருகிறது. 

ஐக்கிய அரபு அமீரகம் அணி, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஆகியவற்றையும் ஸ்கை247 நிறுவனம் ஸ்பான்சர் செய்தது. கடந்த ஆண்டு  இந்திய அணி இலங்கைசென்று ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியது. அந்தத் தொடருக்கும் ஸ்பான்ஸர் செய்ததும் சூதாட்ட நிறுவனமான ஸ்கை247.நெட்தான்.

கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் ஸ்கை247.நெட் நிறுவனம் அபுதாபியில் இந்த மாதக் கடைசியில் நடக்கும் ஐஐஎப்ஏ சினிமா விருதுகளுக்கும் ஸ்பான்ஸர் செய்ய இருக்கிறது என்பது கூடுதல் தகவல். இந்தியர்கள் பணத்தில் முதலீட்டில் நடத்தப்படும் ஸ்கை247.நெட் நிறுவனம் மாதந்தோறும் நூற்றுக்கணக்கான கோடிகளை ஈட்டி வருகிறது
இப்போது நம்மிடம் எழும் அடிப்படை கேள்வி, சூதாட்டம் இந்தியாவில் சட்டப்பூர்வமாக இருக்கிறதா என்பதுதான்.

நிச்சயமாக, இந்தியாவில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. பெரும்பலான சூதாட்டச் சட்டங்கள் ஆன்-லைன் சூதாட்டங்களுக்கு நீட்டிக்க தெளிவான வரையரை இல்லை. கடந்த 2019ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஆன்-லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்தும், வெளிநாடுகளைச் சேர்ந்த சூதாட்ட இணையதளங்களை தடை செய்வது குறித்தும்  மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்யலாம் எனத்  தீர்ப்பளித்தது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில், “ ஆன்-லைன் கேம், வெளிநாடுகளைச் சேர்ந்த சூதாட்ட இணையதளங்கள் ஆகியவற்றை தடை செய்வது தொழில்நுட்பரீதியாக சாத்தியமில்லை. ஸ்கை247.நெட் நிறுவனம் மே.இ.தீவுகளில் உள்ள குராகோ எனும் நகரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இது இந்திய நீதித்துறையின் கட்டுப்பாட்டில் வராது. ஆனால், தேசத்தின் வளங்களை உறிஞ்சும் இதுபோன்ற விஷயங்களைத் தடை செய்ய நாடாளுமன்றம், நீதித்துறை, அரசு நிர்வாகம் ஆகியவை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

click me!