
தியோதர் டிராபி தொடரில் சதம் விளாசிய இளம் வீரர் ஷுப்மன் கில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அணியில் இணையும் நம்பிக்கையில் உள்ளார்.
இந்திய அணிக்கு ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, கலீல் அகமது என பல இளம் திறமைகள் வரிசைகட்டி வருகின்றனர். மேலும் பல இளம் திறமைசாலிகள் இருந்தாலும் அனைவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க முடியாது என்றாலும் மிகச்சிறந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ரிஷப் பண்ட் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் டெஸ்ட் அணியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி அணியில் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துள்ளனர். இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் உலக கோப்பையை பிரித்வி ஷா தலைமையில் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஷுப்மன் கில், அடுத்ததாக இந்திய அணியில் இணையும் முனைப்பில் உள்ளார்.
இந்நிலையில் தியோதர் டிராபி தொடரில் ரஹானே தலைமையிலான இந்தியா சி அணியில் ஆடிவரும் ஷுப்மன் கில், இந்தியா ஏ அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சதம் விளாசி இந்தியா சி அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார். ரஹானே, ரெய்னா ஆகிய சீனியர் வீரர்களின் விக்கெட்டுகளை விரைவில் இழந்தபோதும், இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா சி அணியை வெற்றி பெற செய்தார். 111 பந்துகளில் 106 ரன்களை குவித்து கடைசி வரை கில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் தியோதர் டிராபி தொடரில் இளம் வயதில் சதமடித்த வீரர்களின் பட்டியலில் கங்குலி மற்றும் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார் ஷுப்மன் கில். இதையடுத்து இந்திய அணியின் அடுத்த கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக எப்போது ஆடுவீர்கள் என்று நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, நான் இப்போதே இந்திய அணியில் ஆடுவதற்கு தயாராகிவிட்டேன். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அடுத்த தொடரில் இடம்பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆட உள்ளது. எனவே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார் ஷுப்மன் கில். அவரது கனவு நனவாகிறதா என்று பார்ப்போம்.