யானைக்கும் அடி சறுக்கும்.. தோனியின் வியூகத்தை உடைத்தெறிந்த ஹோப்!! என்ன தல.. இப்படி ஆயிப்போச்சு

By karthikeyan VFirst Published Oct 26, 2018, 1:15 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பரபரப்பான கடைசி பந்தில் தோனியின் வியூகத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் உடைத்தெறிந்து போட்டியை டிரா செய்தார். 
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பரபரப்பான கடைசி பந்தில் தோனியின் வியூகத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் உடைத்தெறிந்து போட்டியை டிரா செய்தார். 

இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி, தற்போதைய சூழலில் பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அனுபவ வீரரான அவரது ஆலோசனை மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டு காரணங்களுக்காகத்தான் அணியில் நிரந்தரமாக இடம்பிடித்துள்ளார்.

இக்கட்டான நேரங்களில் கேப்டன் மற்றும் பவுலர்களுக்கு ஆலோசனை, கள வியூகம் ஆகியவற்றில் தோனியின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும். பவுலர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கும் தருணங்களில் அவர்களை தோனி வழிநடத்துவார். கேப்டனுக்கும் இக்கட்டான சூழலில் ஆலோசனைகளை வழங்குவார். பெரும்பாலும் அது நல்ல பலனளிக்கும். ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் தோனியின் வியூகம் முறியடிக்கப்பட்டது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 322 ரன்கள் என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி வெறித்தனமாக விரட்டியது. அந்த அணியின் ஹெட்மயர் மற்றும் ஹோப் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் அந்த அணி வெற்றியை நெருங்கியது. எனினும் போட்டி டிரா ஆனது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. எனவே சிக்ஸர் விளாச வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பேட்ஸ்மேன் ஹோப். உமேஷ் யாதவ் அந்த ஓவரை வீசினார். கடைசி பந்திற்கான களவியூகத்தை தோனி வகுத்தார். அப்போது தேர்டுமேன் திசையில் இருந்த ஃபீல்டர் முன் கொண்டுவரப்பட்டு, பாயிண்ட் திசையில் இருந்த ஃபீல்டர், டீப் பேக்வார்டு பாயிண்டுக்கு மாற்றப்பட்டார். கடைசி பந்தை வைடு யார்க்கராக உமேஷ் வீச, அதை பவுண்டரிக்கு விளாசி போட்டியை டிரா செய்தார் ஹோப்.

போட்டிக்கு பிறகு பேசிய ஹோப், ஃபீல்டிங் மாற்றம் செய்யப்பட்டதும், அந்த ஃபீல்டிங்கை வைத்தே கடைசி பந்து வைடு யார்க்கராக வரப்போகிறது என்பதை உணர்ந்து அதற்கு தயாராக இருந்தேன். பந்தை பேட்டில் அடித்துவிட்டாலே பவுண்டரிக்கு சென்றுவிடும். சற்று ஓங்கி அடித்தால் சிக்ஸர். ஆனால் அந்த பந்தில் பவுண்டரிதான் கிடைத்தது. போட்டியும் டிராவில் முடிந்தது என்று ஹோப் கூறினார். 

யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா..? தோனியின் வியூகத்தை இளம் வீரராக இருந்தாலும் தெளிவான அறிவாற்றலால் புரிந்துகொண்டு ஆடியுள்ளார் ஹோப்.
 

click me!