ஹாங்சோவில் நடந்த பெண்களுக்கான தனிநபர் பிரிவில் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கம் வென்றார்.
சீனாவின் ஹாங்சோவில் 4ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நாளை 28ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது நடந்து வரும் போட்டிகளில் கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.
முதல் முறையாக வெளிநாட்டில் நடக்கும் ஐபிஎல் ஏலம் – எப்போது நடக்கிறது தெரியுமா?
இந்த நிலையில் தான் இன்று நடந்த பெண்களுக்கான தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஷீத்தல் தேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆலிம் நூரை வீழ்த்தி 144-142 என்ற ஸ்கோர் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இதே போன்று பெண்கள் கலப்பு காம்பவுண்ட் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கலப்பு காம்பவுண்ட் பிரிவில் ராகேஷ் குமார் மற்றும் ஷீத்தல் தேவி தங்கம் வென்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக ஷீத்தல் தேவி 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என்று 3 பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான பேட்மிண்டன் தனிநபர் எஸ்.எல்.3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கம் கைப்பற்றினார். மேலும், நிதேஷ் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் F-54 பிரிவில் இந்தியாவின் பிரதீப் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதே போன்று பெண்களுக்கான செஸ் போட்டியில் இந்தியாவின் ஹிமான்ஷி புவனேஷ்வர்குமார் ரதி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியா 18 தங்கம் 23 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என்று கைப்பற்றி பதக்க பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.