
11வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. சூதாட்டப் புகார் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகிறது.
இந்நிலையில், ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்களை தவிர, மற்ற வீரர்களுக்கான ஏலம் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்தமுறை, உலகின் முன்னணி வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அதேநேரத்தில் இந்திய இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதுவரை ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்திவந்த கிறிஸ் கெய்ல், மலிங்கா, டேல் ஸ்டெயின் ஆகியோரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.
இவர்கள் மட்டுமல்லாமல், ஜோ ரூட், இயன் மோர்கன், கோரி ஆண்டர்சன், ஷான் மார்ஷ், ஜேம்ஸ் ஃபாக்னர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
இவர்களில் கிறிஸ் கெய்லை மட்டும் மூன்றாவது முறையாக ஏலம் விட்டபோது, சேவாக் ஆலோசகராக உள்ள பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில், கெய்லை எடுத்தது தொடர்பாக சேவாக் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சேவாக், கிறிஸ் கெய்லை ஆரம்பத்தில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது எனக்கே பெரிய ஆச்சரியமாக இருந்தது. எதிரணிகளுக்கு கெய்ல் எந்த அளவுக்கு ஆபத்தான வீரர் என்பதை அனைத்து அணிகளும் நன்கு அறியும். ஆனால், அவரது அடிப்படை விலைக்குக் கூட எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அது ஏன் என எனக்கு தெரியவில்லை. எந்த அணியும் கெய்லை எடுக்காததன் காரணமாகவே நாங்கள் அவரை எடுத்தோம். கெய்ல் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என சேவாக் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.