
தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷிய அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
ரஷியாவில் அரசு அமைப்புகளின் உதவியுடன் ஊக்கமருந்து பயன்பாடு வீரர், வீராங்கனைகளிடையே பரவலாக இருந்ததாக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான வாடா சார்பில் ரிச்சர்ட் மெக்லாரன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து ரியோ ஒலிம்பிக் போட்டியில் ரஷியாவின் தடகள மற்றும் பளுதூக்குதல் வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் ரஷிய ஒலிம்பிக் கமிட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனி நபர் பிரிவில் மட்டும் அந்நாட்டு வீரர்கள் பொதுவானவர்களாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதே போன்ற கட்டுப்பாடு குளிர்கால பாராலிம்பிக் போட்டிக்கும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்விவரம் பின்வருமாறு: "ஊக்கமருந்து புகாரை அடுத்து, ரஷிய பாராலிம்பிக் கமிட்டி மீதான தடை தொடர்கிறது. எனினும், தனிநபர் பிரிவில் போட்டியிடும் ரஷிய பாராலிம்பிக் வீரர், வீராங்கனைகள் கடுமையான சோதனைக்குப் பிறகு பொதுவான பாராலிம்பிக் வீரர், வீராங்கனை என்ற அடையாளத்தின் கீழ் 5 போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவர்" என்று சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.