
வெளிநாட்டு பயணத்தில் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இதனையடுத்து இரு அணிகள் இடையே ஆறு ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் வரும் 1-ஆம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் அளித்த பேட்டியில், "வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்சுக்கும், விராட்கோலிக்கும் விசித்திரமான ஒற்றுமை இருப்பதை உணர முடிகிறது.
தற்போது விராட்கோலி இளம் கேப்டன். சிறந்த கேப்டனாக உருவெடுப்பது எப்படி? என்பதை அவர் கற்றும், புரிந்தும் வருகிறார். அவர் ஆடுகளத்தில் அதிக ஆர்வத்துடன், கூடுதலான உணர்வுபூர்வமாகவும் சில நேரங்களில் செயல்படுகிறார்.
அதிக உணர்ச்சிபூர்வமாக செயல்படுவது எதிரணியினருக்கு மட்டுமின்றி, சில சமயங்களில் தமது அணியினருக்கும் அச்சுறுத்தலாக அமையும். விராட்கோலியை பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டன் பதவியிலும் விவியன் ரிச்சர்ட்சுடன் ஒப்பிட விரும்புகிறேன்.
விவியன் போல் தான் விராட்கோலியும் இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார். விவியனும் இதேபோல் கேப்டன் பொறுப்பில் வளர்ச்சி கண்டார். முதலில் ஆக்ரோஷமாக செயல்பட்ட அவர் கேப்டன் பொறுப்பில் வளருகையில் சற்று அமைதியை கடைப்பிடித்தார். அணியும் அமைதியாக செயல்பட்டு வெற்றிகளை ஈட்டியது.
விவியனை போல் அமைதியாக செயல்படுவதை கற்றுக்கொள்ளும் நிலையில் விராட்கோலி இருக்கிறார். நவீன கிரிக்கெட் காலத்தில் அதிக போட்டிகளை வீரர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
எனவே குறிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். அதேநேரத்தில் அணியின் வீரர்களை அடிக்கடி மாற்றம் செய்வது நல்லது கிடையாது.
சிறந்த டெஸ்ட் அணியாக விளங்க வேண்டும் என்றால் வீரர்களை அதிகம் மாற்றம் செய்யாமல் அவர்கள் தங்களை நிலை நிறுத்தி கொள்ள போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்.
நன்றாக விளையாடாவிட்டால் அடுத்த ஆட்டத்தில் அணியில் இடம் கிடைக்காது என்ற அச்ச உணர்வு வீரர்கள் மத்தியில் ஏற்பட்டால் அது அவர்களின் சிறப்பான செயல்பாட்டை பாதிக்கும்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் 2 ஆட்டங்களில் ரஹானேவை ஆடும் லெவனில் சேர்க்காதது ஆச்சரியமாக இருந்தது. அவர் வெளிநாட்டு மண்ணில் நன்றாக செயல்படக்கூடியவர்.
வெளிநாட்டு பயணத்தில் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.