ஐபிஎல்லில் ஆட முடியுது.. நாட்டுக்காக ஆட முடியாதா..? கோலியின் ஓய்வால் வெடித்தது சர்ச்சை

By karthikeyan VFirst Published Sep 15, 2018, 1:30 PM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது தவறான செயல் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் விமர்சித்துள்ளார். 

ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது தவறான செயல் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் விமர்சித்துள்ளார். 

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகளும் கலந்துகொண்டு ஆடுகின்றன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய மூன்று அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

வரும் 18ம் தேதி ஹாங்காங்குடன் மோதும் இந்திய அணி, அதற்கு மறுநாளே பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். 19ம் தேதி லீக் சுற்றில் பாகிஸ்தானுடன் மோதும் இந்திய அணி, மீண்டும் சூப்பர் 4 சுற்றில் 23ம் தேதி மோதுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குறைந்தது இரண்டு முறை மோதும்.

கடந்த ஓராண்டுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை சந்தீப் பாட்டீல் விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக "The Quint" என்ற ஆங்கில இணையதளத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அணியில் ஆடவேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக இருக்கும். ஆனால் ஐபிஎல் வந்ததற்கு பிறகு, இந்திய அணிக்காக ஆடுவதை காட்டிலும் அதிகம் பணம் புழங்கும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்கு உடற்தகுதியுடன் இருப்பதற்காக இந்திய அணியில் ஆடாமல் ஒதுங்குவதை பார்க்க முடிகிறது.

தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கு ஓய்வு அவசியம்தான். ஓய்வு அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில் விராட் கோலிக்கு இந்தியாவில் நடக்க இருக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ஓய்வு அளித்திருக்கலாம். அதைவிடுத்து ஆசிய கோப்பையில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

ஆசிய கோப்பை முக்கியமான தொடர். பாகிஸ்தானுடன் இந்தியா மோத உள்ளது. ஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடாதது ரசிகர்களுக்கு மட்டும் ஏமாற்றமல்ல. மிகச்சிறந்த வீரரின் பங்களிப்பு இந்திய அணிக்கு கிடைக்காமல் போவது மிகப்பெரிய இழப்பு.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உணர்ச்சிப்பூர்வமான ஒன்று. அப்படியான ரசிகர்களுக்கு கோலி ஆடாதது மிகப்பெரிய ஏமாற்றமே. ஆசிய கோப்பை தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது ஏன் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். 
 

click me!