ஒரு கேப்டனாக கோலி மேம்படுத்திக்கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்!!

By karthikeyan VFirst Published Sep 15, 2018, 11:51 AM IST
Highlights

கோலி ஒரு தலைசிறந்த வீரர்; ஆனால் சிறந்த கேப்டன் இல்லை என்ற கருத்து வலுவாக உள்ளது. ஒரு கேப்டனாக கோலி தன்னை சில விஷயங்களில் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் எதிரொலியாக கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

குறிப்பாக கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் சரியான காரணங்களுடன் முன்வைக்கப்படுகின்றன. களவியூகம், வீரர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களுடனான அணுகுமுறை ஆகியவற்றில் கோலி இன்னும் சொதப்புகிறார். 

டெஸ்ட் அணிக்கான கேப்டனாகி 4 ஆண்டுகளாகியும் இன்னும் கோலியின் கேப்டன்சியில் அனுபவம் தென்படவில்லை எனவும் அவர் கள வியூகம் மற்றும் வீரர்களை பயன்படுத்துவதில் இன்னும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கவாஸ்கர் அறிவுறுத்தியிருந்தார்.

அதேபோல கங்குலியும் அறிவுரை கூறியிருந்தார். அணியில் உள்ள திறமையான வீரர்களை இனம்கண்டு அவர்களை ஊக்குவித்து, அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரவேண்டியது கேப்டனின் கடமை எனவும் அதை செய்யும்படியும் கோலிக்கு கங்குலி அறிவுறுத்தியிருந்தார். 

கோலி ஒரு தலைசிறந்த வீரர்; ஆனால் சிறந்த கேப்டன் இல்லை என்ற கருத்தே ரசிகர்களுக்கும் உள்ளது. இந்நிலையில், கேப்டன் கோலி ஒரு கேப்டனாக அவர் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம். 

1. அணி தேர்வு

அணி தேர்வில் கோலி தொடர்ந்து சொதப்புகிறார். மேலும் வீரர்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பது என்பது வீரர்களுக்கும் நெருக்கடியையும் பயத்தையும் கொடுக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் புஜாராவை சேர்க்காதது, இரண்டாவது போட்டியில் குல்தீப் யாதவை சேர்த்தது என இந்த தொடரில் அணி தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

அதுமட்டுமல்லாமல், ஆடுகளத்தின் தன்மையறிந்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அணி தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த வகையில் அணி தேர்வில் கோலி கவனம் செலுத்த வேண்டும். 

2. வீரர்களுக்கு நம்பிக்கையை அளித்து அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருதல்

வீரர்களுக்கு நம்பிக்கையை அளித்து, அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை பெறும் திறமை கோலியிடம் இல்லை. கங்குலி, தோனி ஆகியோர் வீரர்களிடம் சகஜமாக பழகி அவர்களை பதற்றப்பட வைக்காமல் அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் கோலியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. 

வீரர்களுக்கு அடுத்த போட்டியில் அணியில் ஆட இடம் கிடைக்குமா என்பதே பெரிய சந்தேகமாக இருந்தால், அவர்களால் எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்? இதுதொடர்பான அதிருப்தியை வீரர்களே ஏற்கனவே கூறியிருக்கின்றனர். எனவே வீரர்களிடம் அணியில் அவர்களுக்கான இடத்தை உறுதி செய்யவேண்டும். மேலும் அவர்களிடமிருந்து  அணியின் வெற்றிக்கு தேவையான ஆட்டத்தை எதிர்பார்ப்பதாக கூறி அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர கோலி முனைய வேண்டும்.

3. டி.ஆர்.எஸ்

ரிவியூ கேட்பதில் கோலி அவசரப்படுகிறார். பவுலர்கள் கொஞ்சம் நம்பிக்கையுடன் அம்பயரிடம் அப்பீல் செய்து அம்பயர் மறுத்துவிட்டாலே உடனடியாக ரிவியூ கேட்டுவிடுகிறார். விக்கெட் கீப்பர், பவுலரிடம் ஆலோசித்துவிட்டு, ஆட்டத்தின் சூழலையும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ரிவியூ கேட்க வேண்டும். இதை செய்ய தவறியதால்தான் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தொடக்கத்திலேயே இரண்டு ரிவியூக்களையும் இந்திய அணி இழந்தது. 

ரிவியூ கேட்பதில் கோலி கூடுதல் கவனத்துடன் நிதானமாக செயல்பட வேண்டும் எனவும் விக்கெட் கீப்பரும் பவுலரும் அவருக்கு தெளிவாக உதவ வேண்டும் எனவும் முன்னாள் வீரர் அஜித் அகார்கரும் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

4. பவுலிங் சுழற்சி

மேற்கண்ட விஷயங்களை விட முக்கியமானது பவுலிங் சுழற்சி. எந்த பவுலரை எந்த இடத்தில் எந்த நேரத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் கோலி சற்று சொதப்புகிறார். இந்த குற்றச்சாட்டை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரே முன்வைத்துள்ளார். பவுலிங் சுழற்சியில் கோலி தொடர்ந்து சொதப்பிவருகிறார். அதன் எதிரொலியாகத்தான், இங்கிலாந்துக்கு எதிரான பெரும்பாலான போட்டிகளில் முன்வரிசை வீரர்களை வீழ்த்திவிட்ட இந்திய அணி, லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தது. அதன் எதிரொலியாக தோல்வியையும் தழுவியது. 

அதற்கு பவுலர்களை சரியாக பயன்படுத்தாததுதான் காரணம். அதிலும் கோலி தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது முன்னாள் ஜாம்பவான்களின் அறிவுறுத்தலாக உள்ளது.
 

click me!