ஸ்லெட்ஜிங்கில் கைதேர்ந்த ஆஸ்திரேலியர்களை ஸ்டம்புக்கு பின்னால் நின்று படுத்தி எடுத்த பண்ட்!!

By karthikeyan VFirst Published Dec 10, 2018, 12:49 PM IST
Highlights

ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போன ஆஸ்திரேலிய அணி வீரர்களை ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டு பல தருணங்களில் ஸ்லெட்ஜிங்கில் படுத்தி எடுத்துள்ளார் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். 
 

ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போன ஆஸ்திரேலிய அணி வீரர்களை ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டு பல தருணங்களில் ஸ்லெட்ஜிங்கில் படுத்தி எடுத்துள்ளார் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போன ஆஸ்திரேலிய வீரர்களையே தெறிக்கவிட்டுள்ளார் ரிஷப் பண்ட். ஸ்லெட்ஜிங் செய்வது முக்கியமல்ல; அதை செய்யும் தருணம்தான் மிக முக்கியம். அதை மிகவும் தெளிவாக அறிந்து சிறப்பாக செய்து அந்த அணியை அலறவிட்டுள்ளார் பண்ட். 

எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பது, ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை வீழ்த்த நினைப்பது எல்லாம் ஆஸ்திரேலிய அணியின் வியூகங்களில் ஒன்று. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே முட்டும் மோதலுமாக பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். 

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சற்றும் சளைக்காத சண்டக்கோழி நம்ம கேப்டன் கோலி. எனவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்றபடியே தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி ஸ்லெட்ஜிங் செய்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கோலி அளித்த பேட்டி, ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் எகிறவிட்டது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு, ரசிகர்கள் மற்றும் ஆஸ்திரேலிய மக்களின் நம்பகத்தன்மையையும் மதிப்பையும் மீட்டெடுப்பதற்காக முன்புபோல் ஆஸ்திரேலிய அணி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடக்கூடாது என்று முடிவெடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் அடையாளமான ஸ்லெட்ஜிங்கை விட்டுவிடக்கூடாது என்று பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்தனர். 

ஆனால் அவர்களுக்குத்தான் ஸ்லெட்ஜிங் செய்ய தெரியும் என்கிற ரீதியில் ஆஸ்திரேலியர்கள் செயல்பட, நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக ஆஸ்திரேலிய வீரர்களை ஸ்டம்புக்கு பின்னால் நின்று படுத்தி எடுத்துள்ளார் ரிஷப் பண்ட். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கவாஜாவ, எல்லாரும் புஜாரா ஆகிவிட முடியாது என்று சீண்டினார் ரிஷப் பண்ட். 

இந்நிலையில், 323 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் டாப் ஆர்டர்கள், அந்த அணியின் நட்சத்திர வீரர்களை சிரமமின்றி வீழ்த்திவிட்ட இந்திய அணிக்கு கடைசி வரிசை வீரர்கள் பயம் காட்டினர். குறிப்பாக பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், லயன், ஹேசில்வுட் ஆகிய நான்கு பவுலர்களும் களத்தில் நிலைத்து நின்று கணிசமான ரன்களை குவித்தனர். 

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னும் பாட் கம்மின்ஸும் ஆடிக்கொண்டிருந்தபோது, கம்மின்ஸை சீண்டினார் ரிஷப் பண்ட். பாட் கம்மின்ஸை பேட்டி என்று அழைத்த ரிஷப், இங்கே பேட் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று அவரை சீண்டினார். எதிரணி வீரர்களை சீண்டுவதில் வல்லவர்களான ஆஸ்திரேலிய வீரர்களை சரியான நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேவையான இடங்களில் சரியாக சீண்டினார் ரிஷப் பண்ட். 

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் போது, ரிஷப் பண்ட்டை பேட் கம்மின்ஸ் சீண்டினார். ஆனால் பண்ட் அதை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிச் சென்றார். ஆனால் அவர் தனக்கான நேரம் வரும், அப்போது உன்னை(கம்மின்ஸை) பார்த்துக்கொள்கிறேன் என்கிற ரீதியில்தான் விலகிச்சென்றிருப்பாரோ என்று இப்போது எண்ணத்தோன்றுகிறது. 
 

click me!