கேப்டன் பதவியிலிருந்து கோலி நீக்கம்..? ஆர்சிபி அணி நிர்வாகம் விளக்கம்

By karthikeyan VFirst Published Sep 9, 2018, 2:47 PM IST
Highlights

ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு விட்டதாக பரவிய தகவல் தொடர்பாக அந்த அணி நிர்வாகம் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 
 

ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு விட்டதாக பரவிய தகவல் தொடர்பாக அந்த அணி நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வலுவான அணியாக திகழ்ந்தும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் மூன்று முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 

உலகின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் ஒருசேர பெங்களூரு அணியில் இருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கடந்த 2013ம் ஆண்டிலிருந்து விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். இவரது கேப்டன்சியின் கீழ் 2016ம் ஆண்டு மட்டுமே ஆர்சிபி அணி இறுதி போட்டி வரை சென்றது. ஆனால் அதிலும் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. 

2018 ஐபிஎல்(11வது சீசன்) தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய பெங்களூரு அணி, பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை. 14 லீக் போட்டிகளில் 6ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பிடித்து வெளியேறியது. 

இதுவரை அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால், அந்த அணி நிர்வாகம், அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. முதல் அதிரடியாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டேனியல் வெட்டோரியை நீக்கிவிட்டு கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். பவுலிங் பயிற்சியாளராக ஆஷிஸ் நெஹ்ராவே தொடர்கிறார். 

இதையடுத்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட உள்ளதாகவும் அவருக்கு பதிலாக டிவில்லியர்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுதொடர்பாக ஆர்சிபி அணியின் செய்தித்தொடர்பாளர் இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக பரவிய செய்திகள் பொய்யானவை எனவும், விராட் கோலியே அடுத்த சீசனுக்கும் கேப்டனாக தொடர்வார் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். 
 

click me!