
சமகால கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த ஸ்பின்னராக வலம்வரும் ரஷீத் கான், தனது பவுலிங் திறமையை வளர்த்துக்கொள்வது குறித்தும் யாரை பார்த்து தனது பவுலிங்கை மெருகேற்றி கொள்கிறார் என்பது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
19 வயதே ஆன ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான், பவுலிங்கில் சாதனைகளை குவித்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ரஷீத் கான், இந்த சிறு வயதிலேயே பவுலிங்கில் பல சாதனைகளை புரிந்துவிட்டார்.
ஐபிஎல் 11வது சீசனில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ரஷீத் கான், தனது திறமையான மற்றும் நேர்த்தியான பவுலிங்கால் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை வாரி குவித்தார்.
ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ரஷீத் கான், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே சிறப்பாக செயல்பட்டு, பல ஜாம்பவான்களின் பாராட்டுகளை குவித்தார். டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த ஸ்பின் பவுலர் என சச்சின் பாராட்டினார். ராகுல் டிராவிட், ஷேன் வார்னே ஆகியோரும் பாராட்டினர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர், டி20 போட்டிகளில் மிகக்குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என அடுக்கடுக்கான சாதனைகளை புரிந்து வருகிறார். தற்போது இவருக்கு 19 வயதே ஆவதால், இவர் ஓய்வு பெறுவதற்குள் பவுலிங்கில் பல சாதனைகளை புரிந்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.
உலகின் டாப் ஸ்பின்னராக வலம் வரும் ரஷீத் கான், தனது ஸ்பின் பவுலிங்கை மெருகேற்றி கொள்வது எப்படி என்பது தொடர்பாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் பேசிய ரஷீத் கான், நான் சிறு வயதிலிருந்தே ஷாகித் அஃப்ரிடி மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரின் பவுலிங்கை பார்த்துக்கொண்டே இருப்பேன். அப்படித்தான் ஸ்பின் பவுலிங்கை கற்றுக்கொண்டேன். இப்பொழுதும் கூட நேரம் கிடைக்கும் போதெல்லாம் கும்ப்ளேவின் பவுலிங்கை பார்ப்பேன். அதுதான் என்னை நான் வளர்த்துக்கொள்ள உதவுகிறது என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
அனில் கும்ப்ளே 1990ம் ஆண்டு முதல் 2008 வரை 18 ஆண்டுகள் இந்திய அணியில் ஆடினார். டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரர் கும்ப்ளே. இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.