
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிவரும் இந்திய இளம் அதிரடி வீரர் கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே அதிரடியாக ஆடி மிரட்டி வருகிறார். டெல்லிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 14 பந்துகளில் சதமடித்தார் ராகுல். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் குறைவான பந்துகளுக்கு அடிக்கப்பட்ட அரைசதம் இது.
இந்த ஐபிஎல் சீசனை சாதனையுடன் தொடங்கிய ராகுல், அடுத்தடுத்த போட்டிகளிலும் அதிரடியாகவே ஆடினார். பஞ்சாப் அணியின் முதல் மூன்று போட்டிகளில் களமிறக்கப்படாத கெய்ல், நான்காவது போட்டியில் தான் களமிறக்கப்பட்டார். அதிரடிக்கு பெயர்போன கெய்லுடன் தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல், கெய்ல் அடிக்க ஆரம்பிக்கும் முன்னரே அதிரடியை தொடங்கிவிடுகிறார். கெய்ல் களத்தில் நிலைத்து பிறகு அடிக்க தொடங்குகிறார். ஆனால், களத்திற்கு வந்ததிலிருந்தே பந்துகளை பறக்கவிடுகிறார் ராகுல்.
மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட, முதல் ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸர் என ராகுல் மிரட்டினார். ஆனால் கெய்ல் நிதானமாகவே தொடங்கினார். அதிரடி மன்னன் கெய்லையே டாமினேட் செய்து ஆடுகிறார் ராகுல். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை, 8 போட்டிகளில் ஆடி 292 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில், தனது அதிரடி ஆட்டம் குறித்து ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். கெய்லுடன் தொடக்க வீரராக களமிறங்குவது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. பெங்களூரு அணியிலும் கெய்லுடன் ஆடியுள்ளேன். அவர் ஒரு சிறந்த மனிதர், அதிரடி வீரர். அவர் களத்தில் இறங்கினாலே எதிரணி பவுலர்கள் அழுத்தமடைகின்றனர். அப்போது, கெய்லின் மீதே எதிரணி பவுலர்களின் கவனம் இருக்கும். அவரை வீழ்த்துவதிலேயே குறியாக இருப்பார்கள். அதனால் என் மீதான அழுத்தம் குறைகிறது. அதை பயன்படுத்தி என் பாணியில் அதிரடியாக ஆடுகிறேன். என் மீதான அழுத்தத்தை கெய்ல் எடுத்துவிடுகிறார் என ராகுல் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.