அறிமுக போட்டியில் அபார சதம்.. ராஜ்கோட்டில் பவுண்டரி மழை பொழிந்த பிரித்வி ஷா

By karthikeyan VFirst Published Oct 4, 2018, 12:56 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்து அசத்தியுள்ளார்.
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் காலை 9.20 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா அறிமுகமாகியுள்ளார். தொடக்க வீரர் ராகுலுடன் களமிறங்கப்போவது அகர்வாலா அல்லது பிரித்வி ஷாவா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், பிரித்வி ஷா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த போட்டியின் மூலம் அறிமுகமாகியுள்ளார். 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கேப்ரியல் பவுலிங்கில் ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து பிரித்வி ஷாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 

இருவருமே நிதானமாகவும் அதேநேரத்தில் தெளிவாக அடித்தும் ஆடினர். அதிலும் அறிமுக போட்டியில் ஆடிவரும் பிரித்வி ஷா, வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பந்தாடி பவுண்டரிகளை விளாசிவருகிறார். பயமோ பதற்றமோ இல்லாமல் தொடக்கம் முதலே அடித்து ஆடிய பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து புஜாராவும் அரைசதம் கடந்தார். வழக்கமாக நிதானமாக ஆடி பொறுமையாக ரன்களை சேர்க்கும் புஜாரா, இந்த போட்டியில் அடித்து ஆடி ரன்களை சேர்த்துவருகிறார். 

முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தாலும் பிரித்வி ஷா மற்றும் புஜாரா ஜோடி சிறப்பாக ஆடி இந்திய அணியை ஆதிக்கம் செலுத்த வைத்தது. முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை வரை பிரித்வி ஷா 75 ரன்களும் புஜாரா 56 ரன்களும் எடுத்திருந்தனர். 

உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தை தொடர்ந்த இந்த ஜோடி மீண்டும் ரன்களை குவிக்க தொடங்கியது. உணவு இடைவேளை முடிந்து வந்ததும் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கிய பிரித்வி, தொடர்ந்து சிறப்பாக ஆடி, அறிமுக போட்டியிலேயே சதம் விளாசினார். 

99 பந்துகளில் சதம் அடித்தார் பிரித்வி ஷா. 15 பவுண்டரிகளை விளாசி சதமடித்தார் பிரித்வி. பிரித்வி ஒருபுறம் பவுண்டரிகளாக விளாசினால், மறுபுறம் புஜாராவும் பவுண்டரிகளை விளாசினார். பிரித்வி 15 பவுண்டரிகளும் புஜாரா 12 பவுண்டரிகளும் விளாசி ஆடிவருகின்றனர். பிரித்வி சதம் கடந்துவிட்ட நிலையில், புஜாரா 70 ரன்களை கடந்து ஆடிவருகிறார். அவரும் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். 

இந்திய அணி 34 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆடிவருகிறது. 
 

click me!