ஒலிம்பிக்கிற்கு தயாராகும் விளையாட்டு வீரர்கள்..! பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

By karthikeyan VFirst Published Jun 3, 2021, 5:54 PM IST
Highlights

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.
 

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளன. அதற்கான தயாரிப்புகள் டோக்கியோவில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடப்பதால், கொரோனா பயோ பபுள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை முறையாக பின்பற்றி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமாக உள்ள நிலையில், ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, தடுப்பூசி போடுவது, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பது ஆகியவை குறித்து பல்துறை சார்ந்த முக்கியமான அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார் பிரதமர் மோடி.

ஒலிம்பிக்கில் 11 விளையாட்டுகளில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் இதுவரை 100 வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர். இன்னும் 25 வீரர்கள் கூடுதலாக தகுதிபெறுவார்கள் என்று பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நமது தேசியத்தின் இதயம் விளையாட்டு. ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்களுடன் 135 கோடி இந்தியர்களும் உள்ளனர். இந்தியர்களின் ஆதரவு நமது வீரர்களுக்கு உள்ளது. நமது வீரர்களின் வெற்றி, எதிர்காலத்தில் சர்வதேச அளவில் சாதனை படைக்க ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

click me!