வருஷம் முழுக்க நல்லா விளையாடிய வீரரை இப்படியா விரட்டுவது..? இது என்னங்க நியாயம்..?

First Published Jun 19, 2018, 12:30 PM IST
Highlights
patil emphasis to give second chance to players who failed in yo yo test


வருடம் முழுக்க சிறப்பாக ஆடிய வீரர்களை அரை மணி நேர உடற்தகுதி தேர்வின் மூலம் வெளியே அனுப்புவது என்ன நியாயம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் உடற்தகுதிக்கு அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வீரர்களின் உடற்தகுதிகளை பரிசோதிப்பதற்காக யோ யோ டெஸ்ட் நடத்தப்படுகிறது. அனுபவ வீரர்கள், சீனியர் வீரர்கள், கேப்டன் என எந்த பாரபட்சமும் இல்லாமல் இந்த டெஸ்ட் அனைத்து வீரர்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது. 

யோ யோ டெஸ்டில் தேர்வாகாத வீரர்கள், அணியில் இடம்பிடிக்க முடியாது. எவ்வளவு சிறந்த ஆட்டத்திறன் மிகுந்த வீரராக இருந்தாலும் இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். யோ யோ டெஸ்டின் மூலம் கடந்த ஆண்டில் முதலில் களையெடுக்கப்பட்டவர் ரெய்னா. பின்னர் யுவராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் யோ யோ டெஸ்டில் தேறாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் இந்திய ஏ அணிக்காக ஆடும் வாய்ப்பை சஞ்சு சாம்சன் தவறவிட்டார். அதன்பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த டெஸ்டில் தோல்வியடைந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி தனது திறமையை மற்றுமொரு முறை நிரூபித்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த அம்பாதி ராயுடு யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

விளையாட்டு வீரர்களுக்கு திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உடற்தகுதியும் முக்கியம் தான். எனினும் இந்த யோ யோ டெஸ்ட் முறை கடும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல், யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாத வீரர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு முறை தேறவில்லை என்றால், சிறிது நேரம் இடைவெளி விடுத்தோ அல்லது மறுநாளோ மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். அதைவிடுத்து வருடம் முழுக்க சிறப்பாக ஆடிய வீரர்களை அரைமணி நேர உடற்தகுதி தேர்வின் மூலம் அணியை விட்டு வெளியேற்றுவது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!