ஷமி, சாஹல் அபாரம்.. மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறும் நியூசிலாந்து!!

By karthikeyan VFirst Published Jan 23, 2019, 9:36 AM IST
Highlights

கேன் வில்லியம்சன் - ரோஸ் டெய்லர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அபாயகரமான இந்த ஜோடியை, பார்ட்னர்ஷிப் அமைக்கும் முன்னதாகவே நல்ல வேளையாக சாஹல் பிரித்துவிட்டார். 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று காலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மார்டின் கப்டிலும் கோலின் முன்ரோவும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை வீசிய ஷமி, அந்த ஓவரில் கப்டிலை போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து தனது அடுத்த ஓவரிலேயே கோலின் முன்ரோவையும் 8 ரன்களில் போல்டாக்கினார். 4 ஓவரிலேயே முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி. தனது முதல் இரண்டு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஷமி. 

இதையடுத்து கேன் வில்லியம்சன் - ரோஸ் டெய்லர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அபாயகரமான இந்த ஜோடியை, பார்ட்னர்ஷிப் அமைக்கும் முன்னதாகவே நல்ல வேளையாக சாஹல் பிரித்துவிட்டார். 15வது ஓவரில் சாஹலின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் டெய்லர். 24 ரன்களில் டெய்லர் வெளியேற, டாம் லதாமும் சாஹல் பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

இதற்கிடையே 16வது ஓவரின் கடைசி பந்தில் விஜய் சங்கரின் பந்தில் வில்லியம்சன் கொடுத்த கேட்ச்சை கேதர் ஜாதவ் தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி களத்தில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து தொடர்ந்து ஆடிவருகிறார் வில்லியம்சன். ஹென்ரி நிகோல்ஸ் 12 ரன்களில் கேதர் ஜாதவின் பந்தில் வீழ்ந்தார். 

அரைசதம் கடந்து பொறுப்புடன் ஆடிவரும் கேப்டன் வில்லியம்சனுடன் சாண்ட்னெர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். அந்த அணி 29 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. 
 

click me!