சச்சின், சேவாக் சாதனையை முறியடிப்பாரா தோனி..? இதுதான் கடைசி சான்ஸ்

By karthikeyan VFirst Published Jan 22, 2019, 4:03 PM IST
Highlights

நியூசிலாந்தில் சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரின் சாதனையை முறியடிக்க தோனிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 

நியூசிலாந்தில் சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரின் சாதனையை முறியடிக்க தோனிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. அந்த அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் அந்த அணி திணறிவருகிறது. ஃபின்ச்சின் தலைமையில் அனுபவமற்ற வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தி தொடரை எளிதாக வென்றது. 

ஆஸ்திரேலிய தொடரில் தோனி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற உத்வேகத்துடன் நியூசிலாந்திற்கு சென்றுள்ளது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை நேப்பியரில் தொடங்குகிறது. 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி, ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து மீண்டெழுந்துள்ளார். இது இந்திய அணியை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. எனினும் ஆஸ்திரேலியாவில் வென்றதை போல கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணியை இந்திய அணி வென்றுவிட முடியாது. 

கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆகிய இரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் போட்டி கடுமையானதாகவே இருக்கும். இந்த தொடரில் சச்சின் மற்றும் சேவாக்கின் சாதனையை முறியடிக்க தோனிக்கு அருமையான வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவில் ஆடிய அதே ஃபார்மில் நியூசிலாந்திலும் ஆடினால், தோனி அந்த சாதனையை படைக்க முடியும். 

நியூசிலாந்தில் அதிக ஒருநாள் ரன்கள் அடித்த வீரர்களில் 652 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் 598 ரன்களுடன் சேவாக் இரண்டாமிடத்திலும் உள்ளார். இந்த பட்டியலில் 456 ரன்களுடன் தோனி மூன்றாமிடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 143 ரன்கள் அடித்தால் சேவாக்கின் சாதனையையும் 197 ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் தோனி முறியடிப்பார். 

இந்த சுற்றுப்பயணம் தான் தோனியின் கடைசி நியூசிலாந்து சுற்றுப்பயணமாக இருக்கும். எனவே இந்த முறை சச்சின், சேவாக்கின் சாதனையை முறியடிக்க முடியாவிட்டால், பின்னர் முடியாது. 
 

click me!