உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பேக்கர் 2-வது தங்கம் வென்று அசத்தல்...

First Published Mar 7, 2018, 1:46 PM IST
Highlights
Manu Baker 2nd gold in World Cup shooting


உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் மானு பேக்கர் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.

 

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்ஸிகோவின் குவாதலஜராவில் நடைபெறுகிறது.

 

இந்தப் போட்டியில் தனிநபர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மானு பேக்கர் 237.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து முதல் தங்கம் வென்றிருந்தார்.

 

இந்த நிலையில், கலப்புப் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில், மானு பேக்கர், ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் 476.1 புள்ளிகள் பெற்று இவர்கள் தங்கம் வென்றுள்ளனர்.

 

இந்த பிரிவில் ஜெர்மனி அணி 475 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், 415 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்த பிரான்ஸ் வெண்கலமும் வென்றது.

 

பதினோறாம் வகுப்பு மாணவியான மானு பேக்கர் செய்தியாளர்களிடம், 'இதை என்னால் நம்ப முடியவில்லை. சீனியர் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் 2 தங்கம் வெல்வேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை' என்று கூறினார்.

 

இதனிடையே, நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், மெஹூலி கோஷ் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

 

இந்தப் பிரிவில் சீனா தங்கப் பதக்கமும், ருமேனியா வெள்ளியும் வென்றன. இந்தியாவின் ரவிக்குமார், அபூர்வி சந்தேலா 4-ஆவது இடத்தைப் பிடித்தனர்.

 

இந்தப் போட்டியில் 7 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

tags
click me!