ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு காவல்துறையில் உயர்பதவி..! மணிப்பூர் அரசு அதிரடி

By karthikeyan VFirst Published Jul 27, 2021, 9:11 AM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானுவுக்கு காவல்துறையில் ஏஎஸ்பி-யாக பதவி வழங்கி மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி, ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே வெள்ளி பதக்கம் வென்று கொடுத்தார் மீராபாய் சானு.

“ஸ்னாட்ச்” பிரிவில் 87 கிலோ, ”கிளீன் அன்ட் ஜெர்க்” பிரிவில் 115 கிலோ என, மொத்தம் 202 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் மீராபாய் சானு, 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதே எடைப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹி மொத்தமாக 210 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேஷிய வீராங்கனை கேண்டிக் விண்டிங் வெண்கல பதக்கம் வென்றார்.

தங்கம் வென்ற சீன வீராங்கனை ஹு ஜிஹி-க்கு ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானால், அவரிடமிருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு, மீராபாய் சானுவுக்கு வழங்கப்படும். எனவே மீராபாய் சானுவின் வெள்ளிப்பதக்கம் தங்கமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

டோக்கியோவிலிருந்து வெள்ளிப்பதக்கத்துடன் நேற்று டெல்லிக்கு வந்த மீராபாய் சானுவுக்கு விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுக்கப்பட்டு, பாரத் மாத கி ஜே முழக்கம் எழுப்பப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவிற்கு வெள்ளி வென்று கொடுத்து பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கு காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக(ஏஎஸ்பி) பதவி வழங்கி மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராகவும் இருந்திருக்கிறார் மீராபாய் சானு. எனவே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கு ரயில்வே துறை சார்பில் ரூ.2 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
 

click me!