
சென்னையில் நடந்து வந்த 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில், மலேசியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா என்று 6 அணிகள் இடம் பெற்றன. இதுவரையில் நடந்த 6 சீசன்களில் முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. எப்படி என்றால், ஒரு முறை மட்டும் இரு அணிகளும் ஒன்றாக கைப்பற்றியுள்ளன. கடந்த சீசனில் தென் கொரியா அணி சாம்பியனாகியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் முதல் சீசனில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 2ஆவது இடமும், மலேசியா 3ஆவது இடமும் பிடித்தது. 2012 ஆம் ஆண்டு நடந்த சீசனில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இந்தியா 2ஆவது இடம் பிடித்தது. மலேசியா 3ஆவது இடம் பிடித்தது.
இதே போன்று, 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஜப்பான் 2ஆவது இடம் பிடிக்க, மலேசியா 3ஆவது இடம் பிடித்தது. 2016 ஆம் ஆண்டு நடந்த சீசனில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 2ஆவது இடமும், மலேசியா 3ஆவது இடமும் பிடித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சாம்பியன் டிராபியை கைப்பற்றின. ஆனால், இந்த சீசனில் மலேசியா 3ஆவது இடம் பிடித்தது.
ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா: ஃபைனலில் மலேசியாவுடன் பலப்பரீட்சை!!
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த 6ஆவது சீசனில் தென் கொரியா முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது. ஜப்பான் 2ஆவது இடமும், இந்தியா 3ஆவது இடமும் பிடித்தன. தற்போது முதல் முறையாக 7ஆவது சீசன் சென்னையில் நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் மலேசியா அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதில் வெற்றி பெறும் அணியைப் பொறுத்து முதல் மற்றும் 2ஆவது இடம் தீர்மானிக்கப்படும்.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 4ஆவது முறையாக சாம்பியனாகும். இதுவே மலேசியா வென்றால் முதல் முறையாக டிராபியை கைப்பற்றும். இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய, 123 போட்டிகளில் இந்தியா 85 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. 17 போட்டியில் மட்டுமே மலேசியா வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஆனால், 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மாலை 6 மணிக்கு நடக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.