எங்க கேப்டன் சொன்னது 100% சரி!! தாதாவுடன் உடன்பட்ட கும்ப்ளே

By karthikeyan VFirst Published Jan 11, 2019, 11:35 AM IST
Highlights

தோனிக்கு அடுத்து அவரை அனைத்து விதமான இந்திய அணிக்கும் நிரந்தர விக்கெட் கீப்பராக்கும் விதமாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 
 

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் எந்த நேரத்திலும் போட்டியை திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய திறன் பெற்றவர் என்று முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே புகழ்ந்துள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரில் ஒரு சதம், நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் ஒரு சதம், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருமுறை 90 ரன்களுக்கு மேல் அடித்தது என தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். 

ரிஷப்பின் விக்கெட் கீப்பிங்கில் சில குறைபாடுகள் இருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இளம் வீரரான அவர், பயம் என்பதே என்னவென்று தெரியாமல் அடித்து ஆடுகிறார். பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடுகிறார். தோனிக்கு அடுத்து அவரை அனைத்து விதமான இந்திய அணிக்கும் நிரந்தர விக்கெட் கீப்பராக்கும் விதமாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்ற ரிஷப், அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இந்திய அணி, உலக கோப்பையை மனதில் வைத்து தேர்வு செய்யப்பட்ட அணி. இந்த தொடர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட அணி தான் உலக கோப்பைக்கான அணியாக இருக்கும். அந்த வகையில் இந்த தொடர்களில் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டதால், அவருக்கு உலக கோப்பையில் வாய்ப்பு இல்லை என்று தேர்வுக்குழு மறைமுகமாக தெரிவித்ததாக கருதப்பட்டது. 

ரிஷப் பண்ட்டை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவைக்க வேண்டும் எனவும், 5 ஓவர்களில் ஆட்டத்தையே மாற்றக்கூடிய திறமைமிக்க ரிஷப்பை உலக கோப்பை அணியில் எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நீக்கப்பட்டது குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார். ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதே தவிர, அவரை ஒருநாள் அணியிலிருந்து நீக்கவில்லை என்றும் உலக கோப்பைக்கான அணியில் கண்டிப்பாக இருப்பார் என்று பிரசாத் விளக்கமளித்தார். 

இந்நிலையில், கங்குலி சொன்ன அதே கருத்தை கும்ப்ளேவும் கூறியுள்ளார். ரிஷப் குறித்து கருத்து தெரிவித்துள்ள கும்ப்ளே, ரிஷப் பண்ட் மூன்று ஃபார்மட்டிலும் ஆடவேண்டும். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிவருகிறார். தனது திறமையான மற்றும் அதிரடியான பேட்டிங்கின் மூலம் திடீரென ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுகிறார். அவர் ஐபிஎல்லில் ஆடியதை நாம் பார்த்திருக்கிறோம். ரிஷப் பண்ட் கண்டிப்பாக மூன்று விதமான போட்டிகளிலும் ஆட வேண்டும் என்று கும்ப்ளேவும் கருத்து தெரிவித்துள்ளார். 

ரிஷப் பண்ட் விஷயத்தில் கங்குலியும் கும்ப்ளேவும் ஒரே கருத்தை தெரிவித்துள்ளனர். 
 

click me!