தப்புகிறார் ராகுல்..? சிக்குகிறார் பாண்டியா

By karthikeyan VFirst Published Jan 11, 2019, 10:09 AM IST
Highlights

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹர்திக் பாண்டியாவிற்கு இரண்டு போட்டிகளில் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹர்திக் பாண்டியாவிற்கு இரண்டு போட்டிகளில் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ராகுல் ஆகிய இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 12, 15, 18 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவும் ராகுலும் சர்ச்சையில் சிக்கினர். சிறந்த நண்பர்களான இவர்கள் இருவரும், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது தனது அந்தரங்க சம்பவங்களை பகிர்ந்துகொண்ட ஹர்திக் பாண்டியா, சில பாலிவுட் நடிகைகளுடனான உறவு குறித்தும் பேசினார். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஹர்திக் பாண்டியா பேசியது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. ராகுலும் சில சம்பவங்களை பகிர்ந்துகொண்டார். இந்த சம்பவம் இவர்கள் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் நில்லாமல், கிரிக்கெட் அல்லாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்த சர்ச்சையையும் கிளப்பியது. 

இந்த சம்பவம் குறித்து 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். நிகழ்ச்சியின் போக்கிற்கு ஏற்றவகையில் பதிலளித்தேனே தவிர, யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல என்று விளக்கமளித்த ஹர்திக், பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.

ஆனாலும் ஹர்திக் பாண்டியாவின் விளக்கத்தில் திருப்தியடையாத பிசிசிஐ  நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் 2 போட்டிகளில் ஆட தடை விதிக்குமாறு பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்துள்ளார். இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் வினோத் ராய் தெரிவித்திருந்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜியும் இருவருக்கும் 2 போட்டிகளில் தடை விதிக்கக் கோரியிருந்தார்.

இருவருக்கும் தடை விதிப்பது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசித்துவருகின்றனர். தடை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. எனினும் ஹர்திக் பாண்டியாவிற்கு இரண்டு போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என தெரிகிறது. அதேநேரத்தில் ராகுல் தடையிலிருந்து தப்ப வாய்ப்புள்ளதாகவும் அவருக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

click me!