உலக கோப்பை அணியில் எந்த வீரருக்குமே உத்தரவாதமே கிடையாது!!

By karthikeyan VFirst Published Jan 10, 2019, 4:13 PM IST
Highlights

உலக கோப்பை வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் உலக கோப்பைக்கு மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன. 

உலக கோப்பை அணியில் எந்த வீரருக்கும் உத்தரவாதம் கிடையாது என இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் உலக கோப்பைக்கு மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன. மற்ற அணிகளை காட்டிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே மிகவும் வலுவாக உள்ளன. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த 2 அணிகளும் தான் அபாரமாக ஆடிவருகின்றன. இந்திய அணியில் ரோஹித், தவான், கோலி என டாப் ஆர்டர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல பவுலிங்கிலும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா அபாரமாக பந்துவீசிவருகின்றனர். 

அதேபோலவே இங்கிலாந்து அணியும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த முறை கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. 

ரோஹித், தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள் என்பது உறுதியான ஒன்று. தொடக்க வீரருக்கான மாற்றாக ராகுல் இருப்பார். 3ம் வரிசையில் எப்போதுமே கோலிதான். மிக நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு 4ம் வரிசையில் ராயுடு உறுதி செய்யப்பட்டுள்ளார். கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவர் 5ம் வரிசையிலும் 6ம் வரிசையில் தோனி, பின்னர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இறங்குவர். வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார் பும்ராவும் ஆடுவர். வேகப்பந்து வீச்சில் மாற்று வீரர்களாக ஷமி மற்றும் கலீல் அகமது ஆகிய இருவரும் இருக்க வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட்டும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. ஸ்பின்னர்களாக குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் பவுலிங் ஆல்ரவுண்டராக ஜடேஜாவும் அணியில் இடம்பெறுவர். இவர்களில் 11 வீரர்கள் அணியில் ஆடுவர். 

இதுதான் ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்ட அணி. இந்த அணிதான் உலக கோப்பையில் ஆட இங்கிலாந்திற்கு செல்லும். இந்நிலையில், உலக கோப்பை அணி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, உலக கோப்பைக்கான அணியில் எந்த வீரருக்கும் உத்தரவாதம் கிடையாது. அனைத்து வீரர்களும் சிறந்த ஃபார்மில் இருப்பது முக்கியம். உலக கோப்பையில் ஆடுவதற்கு நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும் என்பதில் வீரர்கள் மிகுந்த கவனத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். தற்போதைய ஒருநாள் அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. ஃபார்ம் மற்றும் காயம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்யப்படலாம். ஆனால் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்குத்தான் அணியில் வாய்ப்பு என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் எந்த வீரருக்கும் உத்தரவாதம் கிடையாது என ரோஹித் சர்மா அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!