அஸ்வின் செய்த தவறு.. பெங்களூருவை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

First Published Apr 30, 2018, 9:42 AM IST
Highlights
kolkata knight riders defeat kohli lead rcb


ஐபிஎல் தொடரின் 29வது போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

தொடர் தோல்விகளை சந்தித்துவந்த இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 

இந்த போட்டியில் பெங்களூரு அணியில், டிவில்லியர்ஸுக்கு பதிலாக மெக்கல்லமும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக முருகன் அஸ்வினும் களமிறங்கினர். மனன் வோராவுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக டி காக்கும் மெக்கல்லமும் களமிறங்கினர். 

இருவரும் பெரிதாக அதிரடியாக ஆடவில்லை என்றாலும் நிதானமாக ஆடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். 29 ரன்களில் டிகாக் அவுட்டானார். 38 ரன்களில் மெக்கல்லமும் அவுட்டானார். வோரா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

பொறுப்புடன் ஆடிய கேப்டன் விராட் கோலி, 44 பந்துகளுக்கு 68 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 

176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் வழக்கம்போலவே அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். தொடக்கத்திலேயே கிறிஸ் லின்னின் கேட்ச் வாய்ப்பை முருகன் அஸ்வின் தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட லின், கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றியடைய செய்தார்.

சுனில் நரைன் 27 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கிறிஸ் லின்னுடன் ஜோடி சேர்ந்த உத்தப்பா அதிரடியாக ஆடி, 21 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் ராணா 15 ரன்னில் காயம் காரணமாக ஆடாமல் பாதியில் பெவிலியன் திரும்பினார். ரசல் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர்.

தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 23 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்து கொடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காத கிறிஸ் லின், 62 ரன்கள் எடுத்தார். 19.1 ஓவருக்கே 176 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. 

பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. கிறிஸ் லின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!