இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக செம கம்பேக் கொடுத்த ராகுல்

By karthikeyan VFirst Published Feb 9, 2019, 1:23 PM IST
Highlights

கேஎல் ராகுல் ஒருவழியாக ஃபார்முக்கு திரும்பி, இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக செம கம்பேக் கொடுத்துள்ளார். 
 

கேஎல் ராகுல் ஒருவழியாக ஃபார்முக்கு திரும்பி, இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக செம கம்பேக் கொடுத்துள்ளார். 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடமும் கிடைத்தது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் இடம்பெற்றிருந்தார். ரோஹித், தவான், கோலி ஆகிய மூன்று இடங்களும் இந்திய அணியில் உறுதியாகிவிட்டதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதில்லை. 

ஆனால் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிவந்த ராகுல், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்தார். அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பியதால் அந்த தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், அதற்கிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினார். 

பின்னர் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா மீதான சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட அங்கு சென்றார். ராகுல், இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் ஆட இந்தியா ஏ அணியில் இணைந்தார். 

பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ராகுலுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் இந்தியா ஏ அணியில் ஆடுவது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் எனவும் ஒரு புதுமனிதனாகவும் வீரராகவும் திரும்பிவருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதேபோலவே மீண்டும் பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் ராகுல். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சரியாக ஆடாதபோதிலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியுள்ளார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 192 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் அடித்துள்ளார். சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 89 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் விட்ட சதத்தை அடுத்தடுத்து இனி ஆடும் இன்னிங்ஸ்களில் அடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். 

click me!