
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதில் சச்சினுக்கு ஒரு நியாயம்; தோனிக்கு ஒரு நியாயமா? என முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி விலகிக்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் கங்குலி, லட்சுமணன், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர். முன்னாள் வீரர் அஜீத் அகர்கரும் தோனியின் பேட்டிங்கை விமர்சித்திருந்தார்.
தோனிக்கு தற்போது 36 வயது. தோனியின் வயதைக் காரணம் காட்டியும் பலர் அவரை ஓய்வுபெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கபில் தேவ், கடந்த 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தபோது சச்சினின் வயது 38. அப்போது சச்சினை யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இப்போது தோனியின் ஓய்வு குறித்து மட்டும் பேசப்படுகிறது.
தோனியை மாற்றினால் அவருக்குப் பதிலான மாற்று வீரராக யாரை சேர்ப்பீர்கள்? தோனியின் திறமை அணிக்கு முக்கியம். 2020ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் தோனி முக்கியப் பங்கு வகிப்பார் என்று தான் நம்புவதாகவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஒரு இந்திய கேப்டனுக்கு உலகக் கோப்பையை வென்ற மற்றொரு கேப்டன் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.