துவண்டு கிடக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பயிற்சியாளர்!!

First Published May 3, 2018, 2:45 PM IST
Highlights
justin langer appointed as new coach for australian cricket team


ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 5 முறை உலக கோப்பையை வென்று வலுவான கிரிக்கெட் அணியாக வலம்வந்த ஆஸ்திரேலிய அணி, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் கேப்டன், துணை கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரை இழந்து துவண்டு கிடக்கிறது.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகிய இருவரும் தாங்கள் வகித்த பொறுப்பிலிருந்து விலகினர். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மீதான நம்பகத்தன்மையையே சீர்குலைக்கும் விதத்தில் இந்த செயல் அமைந்ததால், ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமென் மீது எந்த புகாரும் இல்லாதபோதும், அந்த செயலுக்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பயிற்சியாளரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தேடிவந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடியுள்ள லாங்கர், ஆஸ்திரேலிய அணிக்காக 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7,696 ரன்கள் குவித்துள்ளார். இதில் 23 சதம், 30 அரைசதங்கள் அடங்கும்.

கடந்த 2009ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்கு துணை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இடைக்காலமாக 2016-ம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் பயணம், இலங்கைப்பயணம் ஆகியவற்றின் போது பயிற்சியாளராகவும் லாங்கர் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

வரும் 22ம் தேதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லாங்கர் பொறுப்பேற்கிறார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவர் பயிற்சியாளராக நீடிப்பார். லாங்கரின் பயிற்சி காலத்தில், ஒருநாள் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, இரண்டு ஆஷஸ் தொடர் ஆகிய முக்கிய தொடர்கள் நடக்க உள்ளன.

சர்வதேச தொடர்களை விட, லாங்கருக்கு முன்னிருக்கும் மிக முக்கிய சவால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் துவண்டு கிடக்கும், வீரர்களை ஒருங்கிணைத்து அணியை வலுப்படுத்துவதுதான். அடுத்த ஆண்டு உலக கோப்பை நடக்க இருப்பதால், லாங்கர் விரைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. 

கடந்த 2012-ம் ஆண்டு வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக லாங்கர் நியமிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறார். கடந்த 2009 முதல் 3 ஆண்டுகளுக்குத் துணை பயிற்சியாளராகவும் லாங்கர் பணியாற்றியுள்ளார். மேலும் இடைக்காலமாக 2016-ம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் பயணம், இலங்கைப்பயணம் ஆகியவற்றின் போது பயிற்சியாளராகவும் லாங்கர் பணியாற்றிய அனுபவம்மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!