கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது இவர் விஷயத்துல ரொம்ப கரெக்டா இருக்கு

First Published May 3, 2018, 12:37 PM IST
Highlights
emerging indian talent prithvi shaw


இளம் வீரர் பிரித்வி ஷாவின் பேட்டிங், கிரிக்கெட் உலகை கவர்ந்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற கையோடு, ஐபிஎல் போட்டியில் ஆடிவரும் பிரித்வி ஷா, அதிரடியாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டும் விதமான பல இளம் வீரர்கள் உருவெடுத்துள்ளனர். அவர்களின் ஆட்டம் மிரட்சியை ஏற்படுத்துகிறது. டெல்லி அணியில் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர்.

டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துவருகிறார். அசாதாரணமான ஷாட்களால் எதிரணியை மிரட்டுவதோடு, பல ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்றுவருகிறார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலக கோப்பையை பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி, அண்மையில் வென்றது. உலக கோப்பையிலும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடினார். 

இந்த ஐபிஎல் ஏலத்தில் பிரித்வி ஷாவை டெல்லி அணி, 1.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. முதல் 4 போட்டிகளில் களமிறக்கப்படாத பிரித்வி ஷா, ஐந்தாவது போட்டியில்தான் களமிறக்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பிரித்வி, டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்து, தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

18 வயதே நிரம்பிய இளம் பிரித்வியின் திறமை அபாரமானது. இந்த ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 140 ரன்கள் எடுத்துள்ளார் பிரித்வி. இவரது ரன்கள் டெல்லி அணிக்கு பெரிய பங்காற்றியிருக்கிறது. 

வயதும் குறைவு. உயரமும் குறைவு. இவருக்கு பந்துவீச வரும் பவுலர்கள், பிரித்வியை சின்ன பையனாக ஆரம்பத்தில் நினைத்திருக்கலாம். ஆனால், அவரது பேட்டிங்கை பார்த்தபிறகு அப்படி நினைத்திருக்க வாய்ப்பில்லை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அந்த பழமொழிக்கு பொருத்தமானவர் பிரித்வி ஷா. பிரித்வி ஷாவின் ஷாட்களையும் பேட்டிங் ஸ்டைலையும் பார்த்து, அவரை குட்டி சச்சின் என வர்ணிக்க தொடங்கியுள்ளனர்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், முதல் ஓவரிலேயே முன்ரோவின் விக்கெட் வீழ்ந்தபோதிலும், அதை பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் அதிரடியாக ஆடி, அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார். பந்துகளுக்கு ஏற்றவாறு கால்களை நகர்த்தி, ஃப்ரண்ட் ஃபூட் ஷாட், பேக் ஃபூட் ஷாட்களை பிரித்வி சிறப்பாக ஆடுகிறார்.

நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் பவுலர் குல்கர்னி வீசிய 3வது ஓவரின் முதல் பந்து, நல்ல லென்த்தில் வந்தது. அதை டீப் மிக் விக்கெட் திசையில் தூக்கி அடித்து சிக்ஸர் விளாசினார். ஷார்ட் பிட்ச்சாக வீசப்பட்ட மூன்றாவது பந்தை, மிட் ஆன் திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் குவித்தார் பிரித்வி.

குல்கர்னியின் பவுலிங் மட்டுமல்லாமல், உனாட்கட், கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய பவுலர்களின் பந்துவீச்சையும் பிரித்வி பதம் பார்த்தார்.

பீல்டர்களுக்கு இடையில் பந்தை அனுப்பி பவுண்டரிகளை பெறுவது, ஷாட் பிட்ச் பந்துகளை அசாதாரணமாக தூக்கி அடிப்பது என ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக இந்த வயதிலேயே உருவெடுத்துவிட்டார் பிரித்வி. 

18 வயதே நிரம்பிய பிரித்வி ஷா, இந்தியாவின் எதிர்கால கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவார் என்பதில் துளியும் ஐயமில்லை.

click me!