ஐபிஎல்லில் புதிய அணி உதயம்..?

By karthikeyan VFirst Published Sep 17, 2018, 12:59 PM IST
Highlights

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 
 

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 

உலகின் மிகப்பிரபலமான மற்றும் பிரம்மாண்டமான டி20 லீக் தொடராக ஐபிஎல் விளங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் போன்ற மற்ற நாடுகளிலும் இதேபோன்று டி20 பிரீமியர் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஐபிஎல்லில் கிடைக்கும் அளவிற்கு வருவாய் மற்ற லீக் தொடர்களில் வீரர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே மற்ற நாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டிவருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் நிரந்தரமான அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகளும் இருக்கின்றன. 

சில அணிகள் கைமாற்றப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் டெக்கார் சார்ஜர்ஸ் என்று இருந்த அணிதான், பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்றானது. அதுமட்டுமல்லாமல், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, குஜராத் லயன்ஸ், புனே வாரியர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் ஆகிய அணிகள் சில சீசன்களில் ஆடிய பின்னர் கலைக்கப்பட்டன. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் சூதாட்டப் புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடைபட்டபோது, அந்த அணியின் வீரர்கள் குஜராத் மற்றும் புனே அணிகளில் கலந்து ஆடினர். சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் தடை முடிந்து, 2018 சீசனில் ஆடின. அதனால் குஜராத் மற்றும் புனே அணிகள் கலைக்கப்பட்டன. 

தொடக்கம் முதலே ஐபிஎல்லின் நிரந்தர அணிகளாக 8 அணிகள் மட்டுமே ஆடிவருகின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் அணி புதிய அணியாக ஐபிஎல்லில் ஆடுவது குறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவுடன் பேசிவருவதாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். அதனால் விரைவில் ஜம்மு காஷ்மீரிலும் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் ஆளுநர், இதுதொடர்பாக பேசிவருவதாகத்தான் குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளிக்கிறதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 

click me!