
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவிற்குப் பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார்.
வாட்சன், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் வாட்சன், டு பிளிசிஸ் தலா ஒரு பவுண்டரி அடிக்க சென்னை அணிக்கு 10 ரன்கள் கிடைத்தது. 2-வது ஓவரை சாவ்லா வீசினார்.
இந்த ஓவரில் டு பிளிசிஸ் இரண்டு பவுண்டரி விரட்டினார். 3-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரில் டு பிளிசிஸ் ஒரு புவண்டரி அடிக்க 6 ரன்கள் கிடைத்தது. சுனில் நரைன் வீசிய 4-வது ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடிக்க 5 ரன்கள் கிடைத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓவரில் 29 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது ஓவரை மிட்செல் ஜான்சன் வீசினார். இந்த ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி, சிக்ஸ், டு பிளிசிஸ் ஒரு சிக்ஸ் விளாச சென்னைக்கு 19 ரன்கள் கிடைத்தது. இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
6-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டு பிளிசிஸ் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 15 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 27 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து வாட்சன் உடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். ரெய்னா இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி விரட்டினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் பிளே ஆன முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரை ரஸல் வீசினார். இந்த ஓவரில் ரெய்னா இரண்டு பவுண்டரி விரட்டினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்திருந்தது. இதனால் 200 ரன்னைத் எட்டிவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 11-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் வாட்சன் 25 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
வாட்சன் அவுட்டான சிறிது நேரத்தில் ரெய்னா 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது. 14.4-வது ஓவரில் அம்பதி ராயுடு 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனால் ஸ்கோரை உயர்த்து பொறுப்பு கேப்டன் டோனியின் தலையில் விழுந்தது. டோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்துள்ளது. டோனி 25 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.