இளங்கன்று பயமறியாது.. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமா இருக்கு!!

First Published May 3, 2018, 3:20 PM IST
Highlights
indian young players are amazing batting


அனைத்து விளையாட்டுக்களிலும் ஒவ்வொரு தருணத்திலும் ஜாம்பவான் வீரர்கள் உருவாவார்கள். அவர்கள் விலகியதும் அடுத்த ஜாம்பவான்கள் உருவாகிவிடுவார்கள். எல்லா விளையாட்டுகளுக்கும் எல்லா துறைகளுக்கும் பொதுவான இந்த விஷயத்தில் கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கல்ல. அதிலும் இந்திய அணியும் விதிவிலக்கல்ல.

இந்திய அணியை பொறுத்தவரை 1980களில் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோர் ஜாம்பவான்களாக திகழ்ந்தனர். 1990களில் தொடங்கி இரண்டு பத்தாண்டுகளுக்கு இந்திய ரசிகர்களை கட்டிப்போட்ட பெயர் சச்சின். 90களின் இறுதியிலிருந்து அடுத்த பத்தாண்டுகளுக்கு கங்குலி, டிராவிட், லட்சுமண், சேவாக், கைஃப், யுவராஜ் சிங் ஆகியோர் கோலோச்சினர்.

தோனி தலைமையிலான அணியில் கம்பீர், விராட் கோலி, ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக ஆடினர். தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு கோலி கேப்டனானார். கோலியின் தலைமையிலான இந்திய அணியில், ரோஹித், தவான் ஆகியோர் மிரட்டலாக பேட்டிங் செய்கின்றனர். கோலி, ரோஹித், தவான் ஆகியோர் இந்திய அணியின் அடையாளங்களாக திகழ்கின்றனர்.

இவ்வாறு கபில் தேவ், கவாஸ்கர் தொடங்கி, சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக், தோனி, யுவராஜ், கோலி, ரோஹித், தவான் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்திய அணி சிறப்பாகவே இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த தலைமுறை அணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழலாம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்ந்துவரும் இந்திய அணி, எதிர்காலத்திலும் புதிய உச்சத்தை எட்டும் என்பதை இந்த ஐபிஎல் தொடரிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சர்வதேச கிரிக்கெட் முற்றிலும் வேறானது. அதனால் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை வைத்து வீரர்களின் திறமையை அனுமானித்துவிடமுடியாது என்றாலும், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களின் ஆட்டத்திறன் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பெரும்பாலும் இளம் வீரர்கள் நிறைந்த டெல்லி அணியில், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோரின் பேட்டிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர்கள் ரன்கள் குவிப்பதில் மட்டும் இல்லை; அவர்களின் ஆடுவதில் இருந்து அவர்களது பேட்டிங் திறமையை தெரிந்துகொள்ள முடிகிறது. ஷார்ட் பிட்ச் பந்துகளை பிரித்வி ஷா அடிக்கும் விதம் அபாரம்.

அதேபோல், பவுன்ஸ் பந்துகளை டீப் ஃபைன் லெக் திசையில் ரிஷப் பண்ட் ஆடுவது, பவுலர்களை மிரளவைக்கிறது. லாங் லெக், டீப் மிட் விக்கெட், டீப் ஸ்கொயர் லெக், லாங் ஆன் என லெக் திசை முழுவதும் பந்துகளை பறக்கவிட்டு மிரட்டுகிறார் ரிஷப் பண்ட். 

ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகிய இளம் வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்கின்றனர். எனவே இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாகவே உள்ளது. 
 

click me!